உலக சுகாதார நிறுவனம் அமைக்கப்பட்ட தினத்தைக் குறிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட உலக சுகாதார தினம் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் (ஏப்ரல் 7) அனுஷ்டிக்கப்பட்ட உலக சுகாதார தினத்தை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனத்தினாலும் பல சர்வதேச மருத்துவத் துறை அமைப்புக்களினாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் அடங்கியிருந்த தகவல்கள் குறிப்பாக, தாய், சேய் நலன்கள் தொடர்பான தகவல்கள் மனக்கலக்கத்தைத் தருபவையாக இருந்தன.
இன்று உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பெண் கர்ப்பம் தரித்திருக்கும் போது அல்லது மகப் பேற்றின் போது இறக்கின்ற அதேவேளை, ஒவ்வொரு 60 செக்கன்களிலும் 20 இளஞ்சிறுவர்கள் எளிதில் தடுக்கக்கூடிய நோய்களினால் மரணமடைகிறார்கள். உலகளாவிய ரீதியில் மருத்துவத்துறையில் பாரிய முன்னேற்றங்கள் காணப்பட்டிருக்கின்றபோதிலும், 1990 களுக்குப் பிறகு சில நாடுகளில் குறிப்பாக, ஆபிரிக்காக் கண்டத்தின் தென்பிராந்திய நாடுகளில் கர்ப்பிணித்தாய்மார்களினதும் குழந்தைகளினதும் சுகாதார நிலைமை படுமோசமானதாக இருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. கடந்த பல வருடங்களாக கணிசமான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும், பெரும்பாலும் தவிர்க்கக் கூடிய மருத்துவக் காரணங்களுக்காக ஒவ்வொரு வருடமும் ஒருகோடியே 60 இலட்சம் சிறுவர்களும் 5 இலட்சத்து 29 ஆயிரம் தாய்மாரும் மரணமடைகின்றார்கள்.
வயிற்றோட்டம், நிமோனியா, மலேரியா, சின்னமுத்து மற்றும் பிறப்பு முதல் தொடருகின்ற நோய்களே ஐந்து வயதுக்கும் குறைவான சிறுவர்களின் மரணங்களுக்கான பிரதான காரணிகளாக இருக்கின்றன. இவ்வாறு இறக்கும் சிறுவர்களில் பிறந்து ஒரு மாதமாகுமுன்னதாகவே மரணத்தைத் தழுவும் 40 இலட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளும் அடங்குகிறார்கள். உலகில் வருடாந்தம் சுமார் 33 இலட்சம் குழந்தைகள் செத்துப் பிறக்கின்றன. கர்ப்பிணித் தாய்மாரின் மரணங்களில் சுமார் 68 ஆயிரம் மரணங்கள் அல்லது 10 சதவீதமான மரணங்கள் பாதுகாப்பற்ற கருச்சிதைவுகளினால் நிகழ்கின்றன. இது பெரும்பாலும் வறிய நாடுகளில்தான் நேருகிறது. ஆபிரிக்காவில் ஐந்து பெண்களுக்கு ஒருவர் புதிதாகப் பிறக்கும் குழந்தையை இழக்கிறார். கூடுதலான அளவுக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளில் இந்த விகிதாசாரம் 125 பேருக்கு ஒருவராகக் காணப்படுகிறது.
உலகில் வருடாந்தம் 13 கோடியே 60 இலட்சம் குழந்தைகள் பிறப்பதாகக் கணிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மகப் பேறுகளைக் கவனிப்பதென்பது சுகாதார சேவைகளுக்கு பெருந்தொகை நிதியைச் செலவிடமுடியாத நாடுகள் எதிர்நோக்கும் பாரிய சவாலாக இருக்கிறது. 43 சதவீதமான தாய்மாரும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுமே மருத்துவக் கவனிப்புகளைப் பெறுகிறார்கள். எயிட்ஸ் நோய்க் காரணியான எச்.ஐ.வி.யின் தொற்றுக்கு ஆளான பெண்களில் சுமார் 22 இலட்சம் பேர் வருடாந்தம் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். குழந்தை மரணங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை சீனா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, எதியோப்பியா, இந்தியா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 6 நாடுகளிலேயே நிகழ்கின்றன. மகப்பேற்று மரணங்கள் அதிகவீதத்தில் காணப்படும் 20 நாடுகளில் 19 நாடுகள் ஆபிரிக்காவின் தென் பிராந்தியத்தைச் சேர்ந்தவை என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்படுகிறது.
தாய்மாரினதும் குழந்தைகளினதும் மரணங்கள் தற்போதைய போக்கில் தொடருமானால் மகப்பேற்று மரணங்களைக் குறைப்பதற்கான ஐ.நா.வின் இலக்குகளை அடைவதற்கு சில ஆபிரிக்க நாடுகளுக்கு இன்னொரு 150 வருடங்கள் எடுக்கும் என்று உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்கள். ஐ.நா.வின் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளைப் பொறுத்தவரை 2015 ஆம் ஆண்டளவில் குழந்தைகளின் இறப்பு வீதத்தை மூன்றில் இரண்டு பங்காலும் மகப் பேற்று மரணங்களை நாலில் மூன்று பங்காலும் குறைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த இலக்கை அடைவதானால் அடுத்த தசாப்தத்தில் ஒவ்வொரு வருடமும் மேலதிகமாக 900 கோடி டொலர்கள் தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது. வெளியிடப்பட்டிருக்கும் புள்ளி விபரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில். உலகளாவிய ரீதியில் பெண்களினதும் குழந்தைகளினதும் சுகாதாரம் பல அரசாங்கங்களின் முன் உரிமையைப் பெறவில்லை என்பதைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இது மிகவும் வேதனைக்குரிய ஒரு யதார்த்த நிலையாகும்.