வெலிங்டன்: நியூஸிலாந்தின் தேசிய பூங்காவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயர்தர பாடசாலை மாணவர்கள் ஆறு பேரும் ஆசிரியை ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டின் வடபகுதியிலுள்ள ரொங்கறிரோ தேசிய பூங்காவிற்கு வெளிக்கள பயிற்சியொன்றிற்காக சென்றிருந்த ஒக்லண்ட் பாடசாலையின் மாணவர் குழுவொன்றே இவ் அனர்த்தத்தில் அகப்பட்டுள்ளனர்.
திடீரென வீசிய மழையுடன் கூடிய புயல் காற்றால் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து வெள்ளத்தில் இவர்கள் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நியூஸிலாந்தின் பிரதமர் ஹெலன் கிளார்க் இதனை வார்த்தைகளால் விபரிக்க முடியாத அனர்த்தமென வர்ணித்துள்ளார்.
இப் பகுதியில் தனியாக அமைந்துள்ள பள்ளத்தாக்கு ஒன்றிற்கு 10 மாணவர்கள், ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு பயிற்றுனரை உள்ளடக்கிய 12 பேர் கொண்ட குழு சென்றுள்ளது.
மாணவர்கள் தற்பாதுகாப்புக்காக அணியப்படும் ஜாக்கட்டுக்கள் மற்றும் தலைக் கவசங்களை அணிந்திருந்த போதும் கடும் புயலால் ஆற்றின் நீர்மட்டம் திடீரென அதிகரித்து இவர்களை அடித்துச் சென்றதாக எட்மண்ட்ஹிலாரி வெளிக்களப் பயிற்சி நிலையத்தின் நிறைவேற்று அதிகாரி கிரான்ட் டேவிட்சன் தெரிவித்துள்ளதுடன் இவ் அனர்த்தம் வழமைக்கு மாறாதெனவும் இவ்வாறு திடீரென நீர்மட்டம் அதிகரித்ததை தான் ஒருபோதும் பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
16 வயது நிரம்பிய இம் மாணவர்களில் மூன்று பெண்களும் மூன்று ஆண்களும் பலியாகியுள்ளதுடன் ஆண் ஆசிரியர் ஒருவரும் பலியாகியுள்ளார்.
ஏனைய 4 மாணவர்களும் பயிற்சியாளரினால் காப்பாற்றப்பட்டுள்ள அதேவேளை, இவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் வெளியிட்டுள்ள பிரதமர் ஹெலன் கிளார்க், இது ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு பாடசாலையும் சந்தித்துள்ள மிகப் பயங்கரமான கனவு எனவும் தெரிவித்துள்ளார்.