இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக முன்னாள் முதற் பெண்மணி ஹிலாரி கிளின்டன் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு 30 சதவீத பாகிஸ்தானியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இத்தகவல் அந்நாட்டு மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
மற்றொரு ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமா 14 சதவீத ஆதரவுடனும், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மக்கெய்ன் 8 சதவீத ஆதரவுடனும் ஹிலாரிக்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.
உங்களுக்கு வாக்குரிமை இருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள்? வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? போன்ற கேள்விகள் பாகிஸ்தான் மக்களிடம் கேட்கப்பட்டன.
அதில், தற்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கட்சிக்கு 13 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். அதே சமயம், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை 37 சதவீத மக்கள் ஆதரித்தனர்.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட ஏனையோர், இக்கேள்விக்கு கருத்துக் கூற விரும்பவில்லை என்று தெரிவித்ததாக, கருத்துக் கணிப்பை நடத்திய நிறுவனம் கூறியுள்ளது.