திலி: படுகொலை முயற்சியிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பி அவுஸ்திரேலிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிழக்குத் திமோர் ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ் கோட்டா இரு மாதங்களின் பின்னர் ஆயிரக்கணக்கான மக்களின் வரவேற்புக்கு மத்தியில் நாடு திரும்பியுள்ளார்.
தலைநகர் திலியிலுள்ள விமான நிலையத்தில் வந்திறங்கிய ராமோஸ் கோட்டாவுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேசியக் கொடிகளை அசைத்தவாறு மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோபல் பரிசை வென்றவரான 58 வயது ராமோஸ் கோட்டா மீது அவரது வீட்டுக்கருகில் வைத்து கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி போராளிகள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதில் படுகாயமடைந்த ராமோஸ் கோட்டா ஆபத்தான நிலையில் அவுஸ்திரேலியாவிலுள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.
குணமடைந்து நாடு திரும்பிய ராமோஸ் கோட்டாவை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் ஸனானா குஸ்மாவோ, எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
இங்கு தனக்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்றம், அரச அதிகாரிகள், தேவாலயம், நாட்டு மக்கள், மற்றும் சர்வதேச சமூகம் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராமோஸ் கோட்டா தான் மீண்டும் நாடு திரும்பியதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தன்மீது தாக்குதல் நடத்திய போராளிக் குழுவின் தலைவரான கஸ்ராவோ சல்சிங்ஹாவை சரணடைந்து நீதி விசாரணைகளுக்கு முகங் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்திற்கு செல்லும் வழியிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாண்ட் வாத்திய இசைகளுடனும் பாரம்பரிய நடனங்களுடனும் ராமோஸ் கோட்டாவை வரவேற்றுள்ளனர்.
இதேவேளை, பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்பிடத்தை மாற்றுமாறு வழங்கப்பட்ட பாதுகாப்பு உயரதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு மத்தியிலும் திலியில் தனிப்பட்ட இடத்தில் அமைந்துள்ள வாசஸ்தலத்திலேயே தொடர்ந்தும் வசிக்கப் போவதாக ராமோஸ் கோட்டா தெரிவித்துள்ளார்.