மக்கள் வங்கி மக்களை சேமிப்பில் ஈடுபடவைத்து அவர்களது வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்திவருகின்றது, சிறுவயது முதல் சேமிப்புப்பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக பாடசாலைகளில் சேமிப்பு அலகுகளை உருவாக்கி மாணவர்கள் அதிக அளவில் சேமிப்பில் ஈடுபடுவதை உற்சாகப்படுத்த பரிசில்களையும் வழங்கி வருகின்றது. இன்றைய புத்தாண்டு தினத்தில் திருநெல்வேலி மக்கள் வங்கிக்கிளையில் வனிதா வாசனாவ சேமிப்புப்பத்திர அதிஷ்டலாபச் சீட்டிழுப்பில், ஒரே அதிஷ்டசாலியாக நான்கு வயதுடைய மதுசனா என்ற சிறுமிக்கு சேமிப்புத் தொகையான 50,000 ரூபாவுக்கு அதேயளவு பணம் பரிசாகக்கிடைத்துள்ளது. இது மக்கள் வங்கியில் சேமிப்பில் ஈடுபடுவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதை நினைவூட்டுகின்றன.
இவ்வாறு வடபிராந்திய மக்கள்வங்கி உதவிப் பொதுமுகாமையாளர் ஏ.ரி. ஆனந்தராஜா திருநெல்வேலி மக்கள் வங்கிக்கிளையில் இடம் பெற்ற புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.
நிகழ்வுக்கு திருநெல்வேலி மக்கள் வங்கி முகாமையாளர் ஆர். நாகேஸ்வரன் தலைமை தாங்கினார்.
உதவிப் பொதுமுகாமையாளர் ஏ.ரி. ஆனந்தராஜா தொடர்ந்து உரையாற்றுகையில் இன்று மக்கள் வங்கி நாடு முழுவதும் பரந்துவிட்ட வங்கி அமைப்பாக செயல்பட்டுவருகின்றது. மக்கள் மனம் கவர்ந்த வங்கியாக நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதால் ஏழை பணக்காரன் என்ற பேதமில்லாமல் ஒருகோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் மக்கள் விருதைப் பெற்ற ஒரேவங்கி மக்கள் வங்கி தான். சிறுவர்களுக்கு சிசுஉதான, வளர்ந்தோருக்கு யேஸ், உழைப்பாளிகளுக்கு ஜனஜய, பெண்களுக்கு வனிதா வாசனாவ, முதியோருக்கு பரிந்த உயர்கல்வி, மேம்பாட்டுக்கு சுவர்ணபிரதீப, விவசாயிகளுக்கு ஹாவஸ்ட் எனப் பல சேமிப்புத் திட்டங்களை அமுல்படுத்தி அனைவர் வாழ்விலும் ஒளியேற்றி வைத்துள்ளது. இலங்கையில் நாமே அதிக சேமிப்புத் தொகையை கொண்டிருக்கின்றோம் என்றார்.
விழாவில் பிரதம விருந்தினராகக்கலந்து கொண்ட யாழ்மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார் உரையாற்றுகையில், பெண்கள் இன்றைக்குப் பலதுறைகளிலும் முன்னிலைவகித்து உற்சாகமாக உழைத்து வருகின்றார்கள். வங்கிகளிலும் பெண்கள் சிறந்த ஆற்றல்மிக்கவர்களாக வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களாகவும் சிறந்து விளங்குவது பாராட்டுகுரியது.
மக்கள் வங்கி பெண்களுக்காக வனிதா வாசனாவ சேமிப்புத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும், சர்வதேச மகளிர் தினத்தைக் கௌரவிக்கும் வகையில் சேமிப்பில் ஈடுபடுபவர்களுக்கு பரிசுத் திட்டங்களையும் அறிமுகம் செய்து பலரை அதிர்ஷ்டசாலிகளாக மாற்றிவருகின்றது என்றார்.
திருநெல்வேலி மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஆர். நாகேஸ்வரன் தனதுரையில் எமது கிளை வாடிக்கையாளர்களில் இருவருக்கு அதிசிறந்த பரிசாக மோட்டார் சைக்கிளும் ஜயசிறி சீட்டிழுப்பிலும், வனிதா வாசனா சீட்டுழுப்பில் 50,000 ரூபாவும் பரிசாகக் கிடைத்துள்ளமை பெருமைக்குறியது என்றார்.
யாழ். மாவட்ட மக்கள் வங்கி உதவிப் பொதுமுகாமையாளர் ஏ. ஹென்றியும் உறையாற்றினார்.