*செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் பீரிஸ்
யோ.நிமல்ராஜ்
இலங்கையின் பாரிய பொருளாதார அபி விருத்தி நடவடிக்கைகளுக்கு சீன அரசு நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்திருப்பதாக ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவுக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
"ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சீனாவுக்கான விஜயமானது இரு நாடுகளின் இருதரப்பு நட்புறவுகளை ஆழமாகப் பேணுவதுடன், இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வழிகோலியுள்ளது.
மேலும், இலங்கையின் பாரியளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அதிகளவிலான நிதி உதவிகளை வழங்குவதற்கு சீன ஜனாதிபதி ஹு ஜிந்தாவோ முன்வந்துள்ளார்.
அத்துடன், சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் பங்களிப்பு தொடர்பாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அங்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், சீன அரசின் உதவியின் கீழ் இலங்கையில் மிகப்பாரிய அளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பொருளாதார விடயத்தில் பெருமளவான உதவி சீன அரசின் மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ளன.
சீன ஜனாதிபதி ஹு ஜிந்தாவோ சீனாவும் இலங்கையும் ஒரே மாதிரியான கொள்கையை கடைப்பிடிக்கும் நாடுகளென்று தெரிவித்தார்.
புத்தளம் நுரைச்சோலை அனல் மின்நிலைய அபிவிருத்தி திட்டத்துக்கு 455 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியும் தேசிய அரங்கக்கலைக்கான கலையரங்கம் அமைப்பதற்கு 20 மில்லியன் அமெரிக்க டொலரும் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு 307 மில்லியன் அமெரிக்க டொலரும் மற்றும் கிரிபத்கொட - கடவத்தை நெடுஞ்சாலை, நுகேகொட மேம்பாலம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளுக்கும் சீன அரசின் அத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டுநாயக்கா - கொழும்பு அதிவேகச் சாலை நிர்மாணத்திற்கு 292 மில்லியன் அமெரிக்க டொலரும் அம்பாந்தோட்டை எண்ணெய் ஆலையின் அபிவிருத்திக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலரும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், தேயிலை ஏற்றுமதி, இரத்தினக்கல் வணிகம் தொடர்பாகவும் இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சு நடத்தியதுடன், இலங்கையின் இறப்பர் அபிவிருத்திக்கும் சீன அரசு நிதி உதவியளிப்பதாக உறுதியளித்துள்ளது.
மேலும், இச்சந்திப்பின் போது தன்சானியா ஜனாதிபதி, சிலி ஜனாதிபதி, பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பும் நான்கு பாராளுமன்ற உறுப்பினரும் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிலியுடன் மீன் ஏற்றுமதி தொடர்பாக பேச்சுகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடனான இச்சந்திப்பு பூரண வெற்றியளித்திருப்பதாக" பேராசிரியர் தெரிவித்தார்.