மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகரவை எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ரணவக்க உத்தரவிட்டார்.
பாராளுமன்ற வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை கொள்ளையடித்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த இவர் வெலிக்கட பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டுக் கடந்த வாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
நேற்று வியாழக்கிழமை இவர் மீண்டும் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரைப் பிணையில் விடுவிக்கும் படி அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் அடையாள அணிவகுப்பும் நடைபெறவுள்ளதாகவும் சந்தேகநபரைப் பிணையில் விடுவிக்க வெலிக்கட பொலிஸார் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நீதிவான் சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக இருவர் புதன்கிழமை வெலிக்கட பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.