*உதவித்தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு
எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்துவதற்காக 6500 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் ரி.கிருஷ்ணானந்தலிங்கம் தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் கூறுகையில்; "தேவையான உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்யும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தெரிவுசெய்யப்பட்ட பின்னர் வாக்களிப்பு நிலைய கடமைகள், வாக்கெண்ணும் நிலையக் கடமைகள், சிரேஷ்ட, கனிஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள், எழுதுநர்கள், தேர்தல் தொடர்பான ஏனைய நிலைய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அரச சேவை உத்தியோகத்தர்களாக கடமையில் அமர்த்தப்படவுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் உதவித் தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களாக 5100 பேரும் வாக்கெண்ணும் நிலைய கடமைகளுக்காக 1200 பேரும் ஏனைய தேவைகளுக்காக 200 பேரும் அமர்த்தப்படுவதுடன், வெளிமாவட்ட சிரேஷ்ட உத்தியோகஸ்தர்களும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்" என்றார்.