வடமராட்சிப் பகுதியில் வல்வெட்டித்துறை, நெல்லியடி, பருத்தித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் நடத்திய பொலிஸ் நடமாடும் சேவை இப்பிரதேச மக்களுக்கு பெருநன்மையை வழங்கியிருப்பதாக வடமராட்சிப் பிரதேசத்துக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ஜே.எஸ்.கே.லியனகே தெரிவித்துள்ளார்.
இச்சேவை பொலிஸார் பொதுமக்கள் நல்லுறவைக் கட்டி வளர்ப்பதற்காக இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் வடமராட்சியில் நடத்தப்பட்டிருப்பதாகவும் இச்சேவை மூலம் மக்கள் அச்சமின்றி தமது பிரச்சினைகளுக்கான தீர்வை அந்த இடத்திலேயே பெறக்கூடியதாக இருந்ததாகவும் கூறினார்.
இச்சேவை வெற்றிகரமாக அமைய உதவிய சகல கிராம சேவை அதிகாரிகள், அரச பணியாளர்கள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.
நடமாடும் பொலிஸ் சேவை பருத்தித்துறையில் அல்வாய் ஷ்ரீலங்கா வித்தியாலயத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.பி.எஸ்.பண்டார தலைமையிலும் நெல்லியடியில் துன்னாலையில் கலிகை கந்தன் ஆலய சுற்றாடலில் நெல்லியடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எம்.ஏ.ஹேரத் தலைமையிலும் வல்வெட்டித்துறையில் நகரசபைக் கட்டிடத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.சுமித் நிஸங்க தலைமையிலும் நடைபெற்றது.