எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஜே.வி.பி. இவ்வார இறுதியில் ஆரம்பிக்கவிருப்பதாக கட்சியின் ஊடகப் பிரிவு விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொகுதி மட்டத்திலான பிரதான பிரசாரக் கூட்டங்களுக்குப் புறம்பாக மூவாயிரம் சிறிய கூட்டங்களையும், கலந்துரையாடல்களையும் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக் கட்டமாக கல்முனை, பொத்துவில்,சம்மாந்துறை, அம்பாறை தேர்தல் தொகுதிகளில் மக்களை தெளிவுபடுத்தும் சிறிய கூட்டங்களும், கலந்துரையாடல்களும் இடம்பெறவிருப்பதாக அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளர் கிருஷாந்த பிரியதர்ஷன தெரிவித்தார்.
மாத இறுதி வாரத்தில் வீடு வீடாக சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கவிருப்பதோடு, பிரதான பிரசாரக் கூட்டங்களும் நடத்தப்படவிருக்கின்றன.
கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்களே காணப்படுவதால் அனைத்துப் பிரசாரக் கூட்டங்களும், கலந்துரையாடல்களும் தமிழ் மொழியிலேயே நடத்தப்படவிருப்பதாகவும், கட்சித் தலைவர்களின் சிங்கள உரைகள் உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்ப்பதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மாகாண சபை அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் சில சக்திகள் இனவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தமது பிரசாரத்துக்குப் பயன்படுத்த முனைவதாகவும் இதனை முறியடித்து தோல்வியடையச் செய்வதற்கு ஜே.வி.பி. தீவிர பிரசாரத்தை முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் 278 தேர்தல் அலுவலகங்களை திறப்பதற்கு ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது. ஏற்கனவே திருகோணமலை மாவட்டத்தில் 12 கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டிருப்பதாகவும் ஏனையவை அடுத்த வார இறுதிக்குள் திறக்கப்படுமெனவும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
ஒரு வாக்களிப்பு நிலைய பிரிவுக்கு ஒரு கிளை அலுவலகம் என்றடிப்படையில் இந்த அலுவலகங்கள் திறக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.