ஏப்ரல் வசந்த காலத்தைக் களிப்பதற்காக கடந்த திங்கள் முதல் பெருந்திரளான உல்லாசப் பிரயாணிகள் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளார்கள்.
இங்குள்ள உல்லாச விடுதிகளிலும் வாடகை வீடுகளிலும் கடந்த மூன்று நாட்களாக பெருந் தொகையான உல்லாசப் பிரயாணிகள் தங்கியுள்ளார்கள். இங்குள்ள உல்லாச விடுதிகளிலும், வாடகை வீடுகளிலும் பிரயாணிகள் தங்குவதற்குக் கட்டணம் அதிகமாக அறவிடப்படுவதால், சில உல்லாசப் பிரயாணிகள் வெலிமடை, பண்டாரவளை, தலவாக்கலை, அட்டன் போன்ற இடங்களுக்கும் சென்று இரவைக் கழித்தனர்.
மேலும், உல்லாசப் பிரயாணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் நகர பாதைகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இவ்வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக நுவரெலியா பொலிஸார் நகரிலுள்ள பாதைகளை ஒரு வழிப் பாதையாக மாற்றியுள்ளார்கள்.
கடந்த முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் வசந்த கால நிகழ்வுகளாக குதிரைப் பந்தயப் போட்டி, மோட்டார் சைக்கிள்கள் ஓட்டப் போட்டி, ஜீப் ஓட்டப் போட்டி, மேசைப் பந்து, பூப்பந்தாட்டம், கால் பந்தாட்டம் உட்பட கலை கலாசார போட்டிகளும் நடைபெற்றன.
மேலும், விசேட நிகழ்வாக இன்று வெள்ளிக்கிழமை மாலை நுவரெலியா மாநகரசபை பொது மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட மேடையில் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியும், எதிர்வரும் 20 ஆம் திகதி நுவரெலியா - குதிரைப்பந்தயத் திடலைச் சுற்றியுள்ள பாதையில் மோட்டார்காரோட்டப் போட்டியும் 21, 22 ஆம் திகதிகளில் நுவரெலியா, விக்டோரியா பூங்காவில் மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.