புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடலோரப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு வெடிகுண்டுகள் தயாரிக்க உதவும் இரும்புக் குழாய்களைக் கடத்த முயன்ற மீனவர் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை வழியாக விடுதலைப் புலிகளுக்கு பொருள்கள் கடத்தப்படுவதாக தமிழக கியூப் பிரிவுப் பொலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் பேரில் புதுக்கோட்டை கடலோரப் பகுதிகளில் பொலிஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் மீமிசல் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த உழவு இயந்திரத்தை பொலிஸார் மறித்து சோதனையிட்டனர். அதில் சுமார் 20 அடி நீளமுள்ள 53 இரும்புக் குழாய்கள் இருந்தன. உழவு இயந்திரத்தில் இருந்த ரகு என்ற மீனவர் உட்பட ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துராமலிங்கம், மணி, குஞ்சான், முத்து, சிவசாமி ஆகியோரிடம் பொலிஸார் விசாரித்தனர். அதில் அந்தக் குழாய்களை படகு மூலம் விடுதலைப் புலிகளுக்கு கடத்த இருந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து 6 பேரையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விடுதலைப் புலிகளுக்கு பொருள்களை விநியோகம் செய்யும் முகவர்களான வீரமணி, சுரேந்திரன் ஆகியோரை பொலிஸார் தேடி வருகின்றனர்.