நடுக்கடலில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 10 பேரும் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து மீன்கள், வலைகளை இலங்கை மீனவர்கள் கொள்ளை அடித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மற்ற மீனவர்கள் இலங்கை மீனவர்களை சுற்றி வளைத்து கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை காசி மேடு மீன்பிடித் துறைமுகப் பொலிஸாரிடம் காசிமேடு மீனவர்கள் ஒப்படைத்தனர்.
ஆட்சியர், இலங்கை துணைத் தூதரக அதிகாரி, மீன்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஒருங்கிணைப்புக் குழு முன்னிலையில் இலங்கை மீனவர்கள் 10 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பின் அவர்களை எச்சரித்து விடுதலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தமிழக அரசும் அவர்களை விடுவிக்க மத்திய அரசிடம் பரிந்துரை செய்தது.
இந்நிலையில், இலங்கைப் பகுதியில் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்களை திருப்பி அனுப்பவதில் தாமதம் ஏற்பட்டது. இப்போது காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவிழந்தது. இதனால் மீனவர்அனுப்பி வைக்கும் படி இலங்கைக் கடற்படை கேட்டுக் கொண்டது. அதன் படி புதன்கிழமை மாலை இலங்கை மீனவர்கள் 10 பேரும் அவர்களது படகுகளிலேயே அழைத்துச் செல்லப்பட்டு இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.