* பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு
எம்.ஏ.எம்.நிலாம்
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் படுகொலை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணை முடியும் வரை விசாரணை தொடர்பிலான எந்தத் தகவல்களையும் இப்போதைக்கு வெளியிட முடியாது என பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான என்.கே.இலங்கக்கோன் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே படுகொலை தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பல தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் விசாரணைத் தகவல்களை வெளியிடுவதன் மூலம் விசாரணையை தொடர்வதில் முட்டுக்கட்டைகள் ஏற்படலாம்.
எனவே விசாரணை முழு அளவில் முடிவடைந்ததும் முழுமையான தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவிப்போம். அது வரை பொறுத்திருங்கள். ஊகங்களின் அடிப்படையில் தகவல்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இலங்கக் கோன் வலியுறுத்தினார்.