தூத்துக்குடி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை நீர்கொழும்பு அருகேயுள்ள முன்னக்கரையைச் சேர்ந்தவர்கள் குருகுலசூர்ய ரெசிங்டன் நிமால் பெர்னாந்து (35 வயது), குருகுலசூர்ய ஜோசப் ஜெயன (37 வயது), அந்தோனி கிறிஸ்டோபர் பிலேந்திரன் (40 வயது), ஜோசப் டட்லி (42 வயது) ஆகிய 4 பேரும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த 11 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து புறப்பட்டனர். போதுமான மீன்கள் கிடைக்காததால் இந்தியக் கடல் எல்லையை ஒட்டிய பகுதியில் மீன்பிடிக்க வந்தனர்.
அப்போது திசைமாறி இந்திய எல்லைக்குள் வந்தனர். கன்னியாகுமரியில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் இந்தியக் கடல் பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இந்திய கடலோரக் காவல் படையினர் `அகல்யா பாய்' என்ற ரோந்துக் கப்பலில் அதன் கப்டன் சுபேந்தர்சிங் தலைமையில் அந்த வழியாகப் புதன்கிழமை காலை ரோந்து சென்றனர்.
அப்போது இலங்கைப் படகு இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு, அதை மடக்கி, அதில் இருந்த 4 மீனவர்களையும் கைது செய்து தூத்துக்குடி துறை முகத்துக்கு நேற்றுக்காலை அழைத்து வந்தனர். படகையும் இழுத்து வந்தனர். அந்தப் படகில் 300 கிலோ மீன்கள் இருந்தன.
அந்த மீனவர்களிடம் கடலோரக் காவல் படையினர் ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடத்தினர். ஐ.பி.பொலிஸார்,கியூப் பிரிவு பொலிஸார், மீன்வளத் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து 4 மீனவர்களையும் அவர்களின் படகையும் கடலோரக் காவல் படையினர், தூத்துக்குடி தெர்மல்நகர் பொலிஸில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட 4 மீனவர்களும் சிங்களவர்களாவர்.