கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்துச்சேவைப் பிரிவின் தாதியர்கள் நேற்று வியாழக்கிழமை பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதனால் 200 சத்திரசிகிச்சைகள் இடை நிறுத்தப்பட்டன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியரொருவர் பிரதம தாதியொருவரை கடுமையாகத் தூற்றியமையே இந்தப் பணிப் பகிஷ்கரிப்புக்குக் காரணம் என சுகாதார சேவையின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்தது.
மேற்படி, வைத்தியர் இதற்கு முன்னரும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.
குறித்த தாதியர், தனக்கும் நோயாளிகளுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக வைத்தியரான அனில் அம்பவத்த குறிப்பிட்டார்.
குறித்த தாதியர் தொடர்பாக திடீர் விபத்துச் சேவையின் பணிப்பாளரிடம் தான் எடுத்துக் கூறியதாகவும் அந்த வைத்தியர் தெரிவித்தார். ஆனால் வைத்தியருக்கெதிராக தற்போது ஒழுக்காற்று விசாரணைகள் இடம் பெறுவதாக திடீர் விபத்துக்கள் பிரிவின் பதில் பணிப்பாளர் ராணி பெர்னாண்டோ தெரிவித்தார். தாதியர் மேற்கொண்ட இப் பணிப் பகிஷ்கரிப்புக் காரணமாக மேற்கொள்ளப்படவிருந்த 200 சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, குறிப்பிட்ட வைத்தியருக்கெதிராக சுகாதார அமைச்சு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்ததை அடுத்து, பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்ததாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.