* புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் குற்றச்சாட்டு
விடுதலைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் திரைப்படங்களை இலங்கை அரசு பயன்படுத்த முயற்சிசெய்வதாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் திரையரங்க உரிமையாளர் மத்தியில் புதன்கிழமை உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
திரையரங்க உரிமையாளர்கள் விடுதலைப் போராட்டக் கருத்தினை எடுத்துச் செல்பவர்களாக இன்றுள்ளனர். இன்றைய சூழலில் திரையரங்க உரிமையாளர்களின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. ஏனெனில் எமது விடுதலைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் சிங்களச் சக்திகள் செயற்பட்டு வருகின்றன.
அண்மையில் கூட எமது தலைவர் பெயரில் சிங்கள இயங்குனர் ஒருவரால் எடுக்கப்பட்ட திரைப்படம் தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, தொழில்நுட்ப வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது எமது தமிழ் உறவுகளினால் அந்தத் திரைப்படம் வெளிவராமல் தடுக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றம் சென்று இடைக்காலத் தடைகூட விதிக்கப்பட்டுள்ளது.
இது எதனைக்காட்டுகின்றது எனில், எமது விடுதலைப் போராட்டத்தினை சிதைப்பதற்கு அல்லது பிழையான கருத்துகளை பரப்புவதற்கும் திரைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதனையே வெளிப்படுத்துகின்றது.
திரைப்படக்கூடங்கள் விடுதலைப் போராட்டக் கருத்தினை எடுத்துச் செல்பவையாக இருக்க வேண்டும். சமூகச் சீரழிவுகளில் இருந்து மீண்டெழுந்து விடுதலைக் கருத்துகளை வெளிப்படுத்துகின்ற இளம் தலை முறையை வழிப்படுத்துகின்ற திரைப்படங்களே இன்றைய தேவையாக உள்ளன.
மக்களை போராட்டச் சூழலில் இருந்து அந்நியப்படுத்தி விடுதலைப் போராட்டத்தினை அடக்கிவிட திரைப்படங்களைப் பயன்படுத்த சிங்கள அரசு முயற்சித்து வருகின்றது. அரசின் திட்டம் ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.
எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை எடுத்துச் செல்லக்கூடிய ஊடக வளர்ச்சியையே நாம் இப்போது பெற்றிருக்கின்றோம். சிங்கள அரசின் எவ்வாறான பொய்யான பரப்புரைகளையும் எதிர்கொள்ள எமது விடுதலை அமைப்பு ஆயத்தமாகவே உள்ளது.
எமது திரைப்படங்கள் குறிப்பாக திரைப்பட அரங்க உரிமையாளர்கள் விடுதலைப் போராட்டக் கருத்தினை முன்னெடுப்பவர்களாக என்றும் இருக்க வேண்டுமென்றார்.