* 5 படையினர் பலி; புலிகள் தெரிவிப்பு
மணலாறு மண்கிண்டிமலை பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை காலை படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டதுடன், பத்திற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை காலை 9 மணியளவில் பலத்த ஷெல் தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதலுடன் படையினர் பாரிய முன்நகர்வொன்றை மேற்கொண்ட போது விடுதலைப் புலிகளும் கடும் பதில் தாக்குதலை நடத்த உக்கிர மோதல் வெடித்தது.
மாலை ஐந்து மணிவரை நடைபெற்ற கடும் மோதலையடுத்து படையினரின் நகர்வு முயற்சி தடுத்து நிறுத்தப்படவே அவர்கள் பலத்த இழப்புகளுடன் பழைய நிலைகளுக்குப் பின்வாங்கிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கடும் சமரில் ஐந்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் படையினர் வசமிருந்து ரி.56 ரக துப்பாக்கி - 1, ரவைக் கூடுகள் - 15, பை -1, பிகே ரவைகள் - 1000, ஏ.கே.ரவைகள் - 250, பிகே ரவைப் பெட்டிகள் - 03, ரவைத்தடுப்பு அணிகள் - 06, குண்டுகள் -4, கிளைமோர்கள் -2, கூடாரங்கள் - 2 என்பன கைப்பற்றப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.