* ஐ.சி.ஆர்.சி. தெரிவிப்பு
வடபகுதி மருத்துவமனைகளில் மருந்து வகைகளுக்கும் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
வழமையாக ஆஸ்பத்திரிகளுக்கு வருகைதரும் நோயாளிகளுடன் போர் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருவோரையும் பராமரிப்பதற்குரிய ஊழியர்கள் வடபகுதி மருத்துவமனைகள் பலவற்றில் பற்றாக்குறையாக இருப்பதாக ஐ.சி.ஆர்.சி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் மருத்துவப் பரிசோதனை, அறுவை சிகிச்சை மற்றும் ஏனைய சிகிச்கைளுக்காக 54 நோயாளிகள் விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டனர்.
அதனைவிட, மருத்துவ உபகரணங்கள், சிறுவர்களுக்கான தடுப்பூசி மருந்துகள், கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துகளும் எமது சங்கத்தின் ஏற்பாட்டில் விமானம் மூலம் குடாநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து யுத்தம் நடைபெறுவதாக அரசாங்கம் தெரிவித்து அங்கு பத்திரிகையாளர்களையும் மற்றும் மனிதாபிமானப் பணி உதவியாளர்களையும் செல்ல அரசு தடைவிதித்திருப்பதையும் செஞ்சிலுவைச் சங்கம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.