குழாய் நீருக்கான கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, புதிய இணைப்புக் கட்டணத்தையும் சேவைக் கட்டணத்தையும் அதிகரித்துள்ளது.
கடந்த 5 ஆம் திகதி முதல் இந்தக் கட்டண அதிகரிப்புகள் அமுலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புதிய கட்டண அதிகரிப்புக்கமைய, 25 யுனிற்றுக்கும் குறைவாக குழாய் நீரைப் பயன்படுத்துவோருக்கு கட்டண அதிகரிப்பில்லை.
25 யுனிற்றுக்கும் அதிகமாக குழாய் நீரைப் பயன்படுத்துவோருக்கு பத்து வீதக் கட்டண அதிகரிப்பு அறவிடப்படும்.
புதிய கட்டண அதிகரிப்புக்கமைய சகல பாவனையாளர்களிடமிருந்தும் குழாய் நீருக்கு 15 வீத வரி அறவிடப்படும்.
இதுவரை காலமும் இந்த 15 வீத வரியை தேசிய நீர்வழங்கல் சபையே அரசுக்கு செலுத்தி வந்ததாகவும் இனிமேல் அது சாத்தியப்படாதென்பதால் மேற்படி 15 வீத வரியை பாவனையாளர்களே இனிமேல் செலுத்த வேண்டுமெனவும் சபை தெரிவித்துள்ளது.
இதேநேரம், அரை அங்குல இணைப்புக்கான கட்டணம் 5,000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாகவும் முக்கால் அங்குல இணைப்புக்கான கட்டணம் 5,000 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர்மானியை சோதனையிடும் கட்டணம் 350 ரூபாவிலிருந்து 1,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர்க்குழாய்களில் ஏற்படும் நீர்க் கசிவை பரிசோதிக்கும் கட்டணம் 350 ரூபாவிலிருந்து 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மீற்றரிலிருந்து துண்டிக்கப்பட்ட விநியோகத்தை மீண்டும் இணைப்பதற்கான கட்டணம் இனிமேல் 2,300 ரூபாவாகவும் பிரதான குழாயிலிருந்து துண்டிக்கப்பட்ட இணைப்பை மீண்டும் பொருத்தும் கட்டணம் 6,500 ரூபாவாகவும் அறவிடப்படுமென சபை அறிவித்துள்ளது.