* ராஜிதவின் ஒஸ்லோ விஜயம் குறித்து ஹெகலிய விளக்கம்
எம்.ஏ.எம்.நிலாம்
சமாதான முயற்சிகளை மீள ஆரம்பிக்கும் நோக்கில் அமைச்சர் ராஜித சேனாரத்னவை அரசு நோர்வேக்கு அனுப்பவில்லை எனத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, ஆயுதங்களையும் பயங்கரவாதத்தையும் கைவிடாதவரை புலிகளுடன் பேசுவதற்கு அரசு முன்வராது எனவும் சுட்டிக்காட்டினார்.
நேற்று வியாழக்கிழமை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நோர்வே விஜயத்தின் பின்னணி பற்றி ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரம்புக்வெல இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
ஒஸ்லோவில் நடைபெற்ற சமாதான மாநாட்டுக்கு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவை தனிப்பட்ட ரீதியிலான அழைப்புகளே ஆகும். அந்த அழைப்பின் படியே அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன ஒஸ்லோ சென்றார். அங்கு எரிக் சொல்ஹெய்முடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தவறாக அர்த்தப்படுத்த முனையக்கூடாது. நட்புரீதியில் எத்தனை மணிநேரமும் எத்தனை தடவையும் பேசலாம்.
அமைச்சர் ராஜித மீண்டும் சமாதான முன்னெடுப்புகளை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் சொல்ஹெய்முடன் எதுவும் பேசவில்லை.
சமாதான முன்னெடுப்பு, அரசியல் தீர்வு இந்த விடயங்களில் அரசின் நிலைப்பாடு உறுதியானது. அதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. ஆனால் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படும்வரை சமாதானத்தீர்வுப் பேச்சு சாத்தியப்படுமென எதிர்பார்க்க முடியாது.
அரசின் நிபந்தனைகளை ஏற்று புலிகள் கீழிறங்கிவந்தால் சமாதானப் பேச்சுக்கு அரசு தயாராகவே இருக்கின்றது. பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும்வரையில் அரசு ஓயப்போவதில்லை.