* வன்னியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வான் தாக்குதல்
வன்னியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விமானக் குண்டு வீச்சில் சிறுமியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு விசுவமடு புன்னைநீராவியடிப் பகுதியில் நேற்றுக் காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விமானத் தாக்குதலிலேயே 15 வயது சிறுமியொருவர் கொல்லப்பட்டதுடன், இளைஞனொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மக்கள் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரமந்தனாறு மகாவித்தியாலய மாணவியான அன்சிலாஸ்தின் டிலக்சனா (15வயது) என்பவர் உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலில் ஜெராட் என்பவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பயன் தரு மரங்கள் பலவும் சில வீடுகளும் இத் தாக்குதலால் அழிந்து போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தத் தாக்குதலில் பாடசாலைச் சிறுமி கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார, அது உண்மையானால் அவர் சிறுவர் படையணியைச் சேர்ந்தவராயிருக்கலாமெனவும் தெரிவித்தார்.