யாழ்நகரில் நேற்று வியாழக்கிழமை காலை இரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதபாணிகளே இவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
குருநகர் சின்னக்கடைக்கு நேற்றுக் காலை 10.30 மணியளவில் சென்ற ஆயுதபாணிகள் அங்கு மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் மீது பல தடவைகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுச் சென்றுள்ளனர்.
தலையிலும், மார்பிலும் படுகாயமடைந்த நிலையில் இவர் உடனடியாக யாழ்.ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.
படையினரின் பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கடந்த ஒரு மாதத்திற்குப் முன்னரே திருமணம் செய்த குருநகர் சென்.ஜேம்ஸ் வீதியைச் சேர்ந்த வை.வசந்தரூபன் (24 வயது) என்பவரே உயிரிழந்தவராவார்.
இதேநேரம், யாழ்.பிறவுண் வீதிக்குச் சமீபமாக கலட்டி அம்மன் கோவில் வீதியில் நேற்றுக்காலை 10.40 மணியளவில் மற்றொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
சைக்கிளில் சென்று கொண்டிருந்த எஸ்.சிவநேசன் (34 வயது) என்பவரே மோட்டார் சைக்கிளில் வந்தோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் பின்னர் யாழ்.ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.
சிறிது கால இடைவெளியின் பின் யாழ்.குடாநாட்டில் மீண்டும் படுகொலைகள் ஆரம்பமாகிவிட்டதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.