Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 18, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Main News
கட்டுப்பாட்டு விலை அறிவிப்பையடுத்து கடைகளை மூடிய அரிசி வர்த்தகர்கள்
[18 - April - 2008] [Font Size - A - A - A]
எம்.ஏ.எம்.நிலாம்

அரசாங்கம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விசேட வர்த்தமானி பிரகடனத்தின் மூலம் அரிசிக்கு உத்தரவாத விலையை அறிவித்ததையடுத்து, முன்னறிவித்தலின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை ஆட்சேபித்து கொழும்பிலும், வெளி மாவட்டங்களிலும் அரிசி வர்த்தகர்கள் கடைகளை மூடி தமது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக அரிசியின் விலை நூறு ரூபா வரை அதிகரித்துக் காணப்பட்டது. இந்தியா, பர்மா போன்ற நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி தாமதமடைந்ததாலும், உள்ளூர் நெல் உற்பத்தி மழைகாரணமாக பாதிக்கப்பட்டதாலுமே அரிசித்தட்டுப்பாடு ஏற்பட்டது.

கடந்த வாரத்தில் மட்டும் அரிசியின் விலை கிலோ நூறு ரூபாவாக உயர்ந்து காணப்பட்டது.

தமிழ், சிங்கள புதுவருட கொண்டாட்டத்தின் போது அரிசி, உட்பட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்து காணப்பட்டன. கடந்த திங்கட்கிழமை வரை அரிசியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காதிருந்த அரசு நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரிசிக்கு உத்தரவாத விலையை நிர்ணயம் செய்தது.

இந்த திடீர் அறிவிப்பு காரணமாக அரிசி இறக்குமதியாளர்களும், அரிசி விற்பனையாளர்களும், நெல் ஆலை உரிமையாளர்களும் தமது விசனத்தை தெரிவித்துள்ளனர்.

நேற்று கொழும்பிலும், வெளியூர்களிலும் சந்தையில் அரிசி விற்பனைக்கு வரவில்லை. தம்மால் இந்த உத்தரவாத விலைக்கு அரிசியை விற்றால் பாரிய நஷ்டத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்குமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பில் புறக்கோட்டை 4 ஆம் குறுக்குத்தெரு, பழைய சோனகத்தெரு, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி போன்ற இடங்களில் அரிசி மொத்த விற்பனைக்கடைகளும், வெளிமாவட்டங்களில் நெல் ஆலைகளும், அரிசி வர்த்தக கடைகளும் நேற்று வியாழக் கிழமை மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக சில்லறைக்கடைகளிலும் அரிசி காணப்படவில்லை. அவற்றின் விலைகள் மேலும் அதிகரித்திருந்தன.

இதன் காரணமாக நாளாந்த கூலி வேலை செய்து உழைக்கும் மக்கள் அரிசி கிடைக்காததால் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

நாலாம் குறுக்குத் தெரு அரிசி மொத்த விற்பனையாளரொருவரிடம் நிலைமை குறித்து கேட்டபோது, அரசு கால அவகாசம் வழங்காமல் ஒரு இரவுக்குள் உத்தரவாத விலை நிர்ணயித்திருப்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்தார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில்;

அரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருப்பதால் மக்கள் கஷ்டப்படுவதை நாம் உணர்கின்றோம். அதனைப் போக்க அரசு திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கால அவகாசம் வழங்கப்படாமல் திடீரென ஒரே இரவுக்குள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரிசியின் விலையை குறைத்து உத்தரவாத விலையை நிர்ணயித்துள்ளது.

நாம் 80 ரூபாமுதல் 95 ரூபா வரை மொத்த விலைக்கு கொள்வனவு செய்த அரிசியை 63 ரூபாவுக்கு மொத்த விலையாகவும், 70 ரூபா சில்லறைவிலைக்கும் விற்க முடியுமா? இதனால் ஏற்படக்கூடிய நட்டத்தை ஈடு செய்வதற்கு அரசு வழிகாட்டாமல் திடீரென எடுத்த முடிவு நியாயமானதாகத் தெரியவில்லை.

குறைந்த பட்சம் ஒருவாரகாலமாவது அவகாசம் வழங்கப்பட்டிருக்கவேண்டும். அரசின் இந்த திடீர் முடிவு எம்மைப் பெரிதும் பாதிப்பதால் நாம் கடைகளை மூடத்தீர்மானித்தோம். அரசு நியாயமான தீர்வொன்றைத்தரும் வரை கடைகளை திறக்காதிருக்க முடிவு செய்திருக்கின்றோம்.

அரிசியினதும் நெல்லினதும் கையிருப்பை அறிந்து கொள்ளாமல் அரசு எடுத்த முடிவு நேர்மையானதாகக் காணப்படவில்லை எனவும் அந்த வர்த்தகர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கத்தலைவர் எஸ்.பி.சாமி இது பற்றிக் கூறுகையில்,

அரசாங்கம் பர்மாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அங்குள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக இறக்குமதி தாமதமடைந்துள்ளது. பெரும்பாலும் அடுத்த வாரத்தில் அந்த அரிசி வந்து சேரலாமென எதிர் பார்க்கப்படுகிறது. அது அரசுகளுக்கிடையிலான ஏற்பாடாகும்.

அதே போன்று இந்தியாவிலிருந்தும் 500 மெட்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவிருக்கிறது.

இவை இரண்டும் வந்து சேரும் போது ஓரளவு அரிசித்தட்டுப்பாட்டை நிவர்த்திக்க முடியும். அதேசமயம் உள்ளூர் அரிசியும் தாராளமாக சந்தைக்கு வரும் பட்சத்தில் அரிசியின் விலை குறைய வாய்ப்புண்டு.

அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையை தவறாகக் கருத முடியாது. ஆனால் திடீர் நடவடிக்கைதான் சில பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதை மறுக்கமுடியாது.

வெளிநாடுகள் அரிசி ஏற்றுமதியை தடைசெய்ததும், உள்நாட்டில் மழை காரணமாக நெல் அறுவடை பாதிக்கப்பட்டமையும் அரிசித்தட்டுப்பாட்டுக்கும், விலை அதிகரிப்புக்கும் காரணமாக அமைந்தன.

தற்போது எழுந்துள்ள நிலைமைகள் குறித்து சங்கம் உடனடியாக கூடி ஆராய்கிறது. இன்று அல்லது நாளை சங்கத்தின் தூதுக்குழு வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சரைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் எச்சரிக்கை;

இதேநேரம், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரகடனத்தையடுத்து அரிசி அத்தியாவசியப் பொருளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன, அரசின் அனுமதியின்றி எவரும் அரிசியின் விலையை அதிகரிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்திற்கமைய வர்த்தக நிலையங்கள் அரிசியின் நிர்ணய நிலையைக் குறிப்பிட்டு பாவனையாளர்களின் பார்வைக்கு அவற்றை வைக்க வேண்டுமெனவும் இந்த உத்தரவை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் சோதனைகளை மேற்கொண்டு, சட்டத்தை மீறுவோரை சட்டத்தின் முன் நிறுத்துவரெனவும் அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com