3 நாட்களில் முடிந்த கான்பூர் டெஸ்ட் போட்டி நடந்த ஆடுகளம் குறித்து இந்திய கிரிக்கெட் சபையிடம் ஐ.சி.சி.விளக்கம் கேட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கான்பூரில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் 3 நாட்களில் போட்டி முடிவுக்கு வந்தது.
இந்த ஆட்டம் குறித்து அந்தப் போட்டியின் நடுவராக இருந்த ரொஷான் மகானாமா, சர்வதேச கிரிக்கெட் சபையிடம் (ஐ.சி.சி.) அறிக்கையளித்துள்ளார். அதில் ஆடுகளத்தின் தரம் குறித்து அதிருப்தி தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து ஐ.சி.சி., இந்திய கிரிக்கெட் சபையிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபைத் தலைமை செயல் அதிகாரி மால்கம் ஸ்பீட் கூறுகையில், `விளக்கம் கேட்டு இந்திய கிரிக்கெட் சபைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிருக்கிறோம்' என்றார்.
ஆனால் இந்திய கிரிக்கெட் சபை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி, ஐ.சி.சி.விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், `போட்டித் தொடர் முடிந்ததும் போட்டி நடுவர் ஐ.சி.சி.யிடம் அறிக்கை தாக்கல் செய்வார். அதன் பிரதி கிரிக்கெட் சபைக்கு அனுப்பப்படுவது வழக்கமான ஒன்றாகும். 3 நாட்களில் டெஸ்ட் போட்டி முடிவது ஒன்றும் முதல் முறையல்ல. சில விடயங்களில் திருத்தம் செய்யச் சொல்லி ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை இந்திய கிரிக்கெட் சபைக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸாக நான் நினைக்கவில்லை' என்றார்.
இந்தப் பிரச்சினை குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ஹேஸ்டன் கூறுகையில், `இந்திய அணி வெற்றி பெற்ற கான்பூர் ஆடுகளத்தில் என்னை பொறுத்தமட்டில் எந்தவித பிரச்சினையுமில்லை. இதனை கிரிக்கெட் சபையிடமே விட்டு விடுகிறேன். வெவ்வேறு நாடுகளில் ஆடுகளங்களின் தன்மை வெவ்வேறு விதமாக இருக்கும்' என்றும் தெரிவித்தார்.