ஐ.சி.எல் நடத்திய 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
கபில்தேவ் தலைமையில் செயற்பட்டு வரும் இந்திய கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) சார்பில் 20 ஓவர் உலகத் தொடர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடந்தது.
இதன் இறுதிப் போட்டியில் சதீஷ் தலைமையிலான ஐ.சி.எல். இந்திய அணியும் கிறிஸ் கெய்ன்ஸ் தலைமையிலான ஐ.சி.எல்.உலக அணியும் மோதின.
முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்தது. விக்னேஷ் 57 ஓட்டங்களும் ஹலீல் 24 ஓட்டங்களும் எடுத்தனர். உலக அணியின் உப்புல் சந்தன, ஆன்ட்ரூ ஹோல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய உலக அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால், இந்திய அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்டின் 60 ஓட்டங்களும் வின்சென்ட் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.
சம்பியன் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு 1.25 கோடி ரூபாவும் 2 ஆவது இடம்பெற்ற உலக அணிக்கு ரூ.75 இலட்சமும் 3 ஆவது இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கு ரூ.50 இலட்சமும் பரிசாக வழங்கப்பட்டது. விக்னேஷ் (இந்திய அணி) ஆட்டநாயகனாகவும் ஹலீல் (இந்திய அணி) தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதேநேரம், சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) இந்திய கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்) தாங்கள் நடத்தும் போட்டிக்கு அங்கீகாரமளிக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.எல். வக்கீல்கள் சர்வதேச கிரிக்கெட் சபையுடன் தொடர்பு கொண்டதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமை செயலதிகாரி மால்கம் ஸ்பீட் தெரிவித்துள்ளார். எங்கள் வக்கீல்கள் அளிக்கும் ஆலோசனைக்குப் பின் ஐ.சி.எல்.லுக்கு பதிலளிப்போம் என்றும் தெரிவித்தார்.