சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒலிம்பிக் ஜோதி நேற்று அதிகாலை டில்லி வந்தது. டில்லி விமான நிலையத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி, இந்தியாவுக்கான சீனத் தூதர் ஐங் யான் உள்ளிட்ட ஏராளமானோர் இதற்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.
இதனிடையே ஒலிம்பிக் ஜோதி வைக்கப்பட்டுள்ள ஹோட்டல் முன்பாக திபெத்தியர்கள் நேற்றுக்காலை ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒலிம்பிக் ஜோதி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நேற்று இஸ்லாமாபாத்தில் பயணம் மேற்கொண்ட ஒலிம்பிக் ஜோதி நேற்று அதிகாலை 1.30 மணியளவில் விமானம் மூலம் டில்லி வந்தது.
அப்போது ஏராளமான சிறுவர்கள் பல்வேறு வண்ணங்களில் உடை அணிந்து ஒலிம்பிக் ஜோதிக்கு வரவேற்பளித்தனர். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி, இந்தியாவுக்கான சீன தூதர் ஐங் யான் மற்றும் சீன தூதரக அதிகாரிகள் பலர் விமான நிலையத்தில் ஒலிம்பிக் ஜோதியை வரவேற்றனர்.
சீனாவிடமிருந்து விடுதலை கோரி திபெத் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஒலிம்பிக் ஜோதி சென்ற இடங்களில் எல்லாம் திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் டில்லியில் ஒலிம்பிக் ஜோதிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வரவேற்பு விழாவையொட்டி பாலம் விமான நிலையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டில்லி வந்த ஒலிம்பிக் ஜோதி டில்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தபோது நேற்றுக் காலை திபெத்தியர்கள் அந்த ஹோட்டல் முன்பாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சீனாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக ஒரு மணியளவில் திபெத்தியர்கள் சிலர் விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குச் செல்லும் வழியில் வீதிமறியலில் ஈடுபட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
டில்லியில் நேற்று பிற்பகல் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் பி.ரி.உஷா, லியாண்டர் பயஸ் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்களும் பங்கேற்றனர்.
தொடர் ஓட்டத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகை அமைந்துள்ள ராஜ்பாத் சாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்தப் பாதையில் நேற்று பொதுமக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.