இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) நடத்தும் `ருவென்ரி- 20' கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
44 நாட்களில் 59 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தியன் கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) சார்பில் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்பு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பு நடத்தும் முதல் `ருவென்ரி- 20' தொடர் இன்று பெங்களூரில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பெங்களூர் ரோயல் சாலஞ் சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
டிராவிட் தலைமையிலான பெங்களூர் அணியில் இந்தியாவின் கும்பிளே, சகிர்கான், ஜாபர், தென் ஆபிரிக்காவின் கலிஸ், பவுச்சர், மேற்கிந்தியாவின் சந்தர்போல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
சமீபத்தில் முடிந்த தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் காயம் காரணமாக கும்பிளே பங்கேற்கவில்லை. இவர் இன்றைய போட்டியிலும் விளையாடமாட்டார் என டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், முதல் போட்டியில் கும்பிளே நிச்சயம் விளையாட மாட்டார். ஆனால், அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். முதல் போட்டியில் எங்கள் அணியில் யார்... யார் விளையாடுவார்கள் என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
அவுஸ்திரேலிய வீரர் பிராக்கனின் காயம் இன்னும் குணமடையவில்லை. தென்ஆபிரிக்காவின் பவுச்சர், கலிஸ் ஆகியோர் தங்கள் சொந்த நாட்டில் நடக்கும் உள்ளூர் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பிருக்கிறது. பாகிஸ்தானின் மிஸ்பா- உல்- ஹக், பங்களாதேஷின் அப்தூர் ரசாக் இருவரும் தங்கள் தேசிய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். ஆனால், சகிர்கான் நன்றாகத் தேறி வருகிறார். இது இரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விடயமென்றார்.
இன்று நடக்கும் தொடக்கப் போட்டியில் பங்கேற்க கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முழுவீச்சில் தயாராகி வருகிறது. இப்போட்டிக்கான அணியை நேற்று முன்தினம் கங்குலியுடன் நீண்ட ஆலோசனைக்குப் பின் பயிற்சியாளர் புக்கனன் அறிவித்தார். இதில் ஐந்து அந்நிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேற்கிந்தியாவின் அதிரடி கிறிஸ்கெய்ல், அவுஸ்திரேலிய வெற்றிக் கப்டன் பொண்டிங், டேவிட் ஹசி, நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் ஆகியோர் அசத்தக் காத்திருக்கின்றனர். தடை விதிக்கப்பட்ட அக்தர் அணியில் இடம்பிடிக்கவில்லை. இந்தியாவின் இளம் `வேகப்புயல்' இஷாந்த், முரளி கார்த்திக், அகார்கர் பந்துவீச்சில் மிரட்டக் காத்திருக்கின்றனர்.
14 பேர் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி: கங்குலி (கப்டன்), பிரண்டன் மெக்கலம், பொண்டிங், கெய்ல், டேவிட் ஹசி, ஹபீஸ், லட்சுமி சுக்லா, விரத்திமான் சாகா, இஷாந்த், அகார்கர், முரளி கார்த்திக், டின்டா, தேபபிரத தாஸ், இக்பால் அப்துல்லா.