Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
ஜே.வி.பி. யில் ஏற்பட்டிருக்கும் பிளவு
[19 - April - 2008] [Font Size - A - A - A]
காலகண்டன்

"குரங்கின் கையில் கத்தி" என்றொரு பழமொழி சிங்களத்தில் இருப்பதாகக் கூறுவார்கள். குரங்கிடம் ஒரு கத்தியைக் கொடுத்தால் முதலில் அகப்பட்டவற்றை எல்லாம் வெட்டிக் கொள்ளும். இறுதியில் தன்னைத் தானே வெட்டிக் கொள்ள ஆரம்பித்து விடுமாம். இப்பழமொழி இலங்கையின் பல்வேறு இயக்கங்கள் கட்சிகளுக்குப் பொருந்தக்கூடியது. ஆயுதம் ஏந்திய தமிழ்த் தேசிய வாத இளைஞர் இயக்கங்கள் சகலதுமே `குரங்கின் கையில் கத்தி' போன்று நடந்து கொண்டவைதான். அவ்வாறே சிங்கள இளைஞர்கள் மத்தியில் தோன்றி வளர்ந்த ஜனதா விமுக்திப் பெரமுன என்ற ஜே.வி.பி. யும் ஆயுதங்களைத் தூக்கி இளைஞர் யுவதிகளை, மட்டுமன்றி மக்களையும் அழிவுக்கு உள்ளாக்கியதுடன் அவ்வப்போது, தன்னையும் வெட்டிக் கொண்டு வந்துள்ளது. அதன் உச்சக் கட்ட வெளிப்பாட்டை தற்போதைய ஜே.வி.பி.க்குள் இடம்பெறும் சண்டை வெளிப்படுத்துகிறது.

ஜே.வி.பி. இப்போது இரண்டாக மட்டுமன்றி மூன்று நான்கு துண்டுகளாக உடைந்து கொள்ளும் அபாயக் கட்டத்தை அடைந்து நிற்கிறது. இது தவிர்க்க முடியாததும் தடுக்கவியலாததுமாகும். ஏனைய அரசியல் கட்சிகளையும் தலைமைத்துவங்களையும் விரல் சுட்டிக் கனல் பறக்க வீச்சுரைகள் நடாத்திய ஜே.வி.பி.யின் பிரசாரகர்கள் இப்போது தமக்குள் பிரிந்து நின்று ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளையும் அபாண்டங்கள் என்று கூறப்படுபவற்றையும் கக்கி வருகின்றனர். அண்மைக் காலமாக ஜே.வி.பி.க்குள் பல்வேறுபட்ட முரண்பாடுகள் உரசல் கொண்டவையாக இருந்து வந்தன. அவை இப்போது தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளன. வரலாற்றின் அனுபவங்களை, பட்டறிவுகளை உரிய மதிப்பீட்டுக்கு உட்படுத்தி விமர்சனம், சுயவிமர்சனம் என்ற வழிமுறையைப்படுத்தாத எந்தவொரு கொள்கையும் கோட்பாடும் நீண்ட காலத்திற்கு நின்று பிடிக்க முடியாது என்பதற்கு ஜே.வி.பி. கட்சியில் ஏற்பட்டிருக்கக் கூடிய நெருக்கடியும் பிளவும் தகுந்ததோர் உதாரணமாகும். இச்சூழலில் ஜனதா விமுக்திப் பெரமுன என்றழைக்கப்படும் ஜே.வி.பி. பற்றிய முழுமையான ஒரு பார்வையைச் செலுத்துவது அவசியமானதாகும்.

ஜே.வி.பி. யின் ஆரம்பத் தலைவராக விளங்கிய மறைந்த றோகண விஜேயவீர அன்றைய சோவியத் யூனியனில் மொஸ்கோ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று இடையில் அதனைக் கைவிட்டு இலங்கை திரும்பியவர். இலங்கையின் பழைய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து என்.சண்முகதாசன் தலைமையில் புரட்சிகர மாக்சிஸ லெனினிஸக் கட்சி பிளவடைந்து வேகமுடன் செயல்பட்ட காலகட்டம் 1964-65 ஆகும். விஜயவீர அக்கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து முக்கியமான இயக்குநராகச் செயல்பட்டார். அதன் மூலம் தென்னிலங்கையில் அணிதிரண்ட சிங்களப் புரட்சிகர இளைஞர் அணிகளின் தொடர்புகளை விஜயவீர வலுப்படுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே விஜேயவீரவுக்கு இனவாதக் கண்ணோட்டம் படிந்திருந்தது. சண்முகதாசன் ஒரு தமிழராக இருப்பதால் புரட்சிகர இயக்கத்திற்கு தலைமைதாங்க முடியாது என்பது அவரது ஆரம்பவாதமாக இருந்தது. இரண்டாவது மலையகத் தமிழ் மக்கள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கைக் கருவிகளாகவே செயற்படுபவர்கள் என்பதாகும். இவற்றை உள்ளடக்கியதாகவே ஜே.வி.பி. ஆரம்பத்தில் நடாத்திய அவர்களது `ஐந்து வகுப்புகள்' அமைந்திருந்தது. சண்முகதாசன் தலைமையிலான புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கொண்டே அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான கூட்டு முன்னணியினர் 1966 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி நடாத்திய இனவாத வேலை நிறுத்தத்திலும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்திலும் விஜேவீர கலந்துகொண்டார். டட்லி - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து இடம்பெற்ற மேற்படி ஊர்வலத்தைப் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தொழிற்சங்கங்களும் எதிர்த்து நிராகரித்திருந்தன. ஆனால், விஜேவீர கட்சி முடிவுக்கு மேலாக அதில் கலந்துகொண்டு `தோசை வடே அப்பிட்ட எப்பா' என முழக்கமிட்டுக் கொண்டார். அதனால் அவர் கட்சியில் இருந்து விசாரணை மூலம் நீக்கப்பட்டார்.

அன்று விஜேவீர ஆரம்பித்து வைத்த ஜே.வி.பி. யின் இனவாதப் பயணம் இன்று வரை தொடர்கிறது. ஐந்து அரசியல் வகுப்புகளுக்கு சமுகமளித்த இளைஞர், யுவதிகளை அணிதிரட்டிய ஜே.வி.பி. அதன் தலைவர் விஜேய வீரவின் முட்டாள் தனமான அதிதீவிர ஆயுதக் கிளர்ச்சியில் இறக்கி விடப்பட்டனர். நாட்டு வெடி குண்டுகளையும் கட்டுத் துவக்குகளையும் நம்பி ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு பொலிஸ் நிலையங்களைக் கைப்பற்றினால் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து விடலாம் என்ற சிறுபிள்ளைத்தனக் கொள்கையிலும் நடைமுறையிலும் ஈடுபட்டனர். அதுவே 1971 ஏப்பிரல் கிளர்ச்சியாக இடம் பெற்றது. செஞ்சட்டையும் சிவப்பு நட்சத்திரம் பதித்த சிகப்புத் தொப்பியும் அணிந்து கம்பீரமாக பேசக்கூடியவருமான விஜேவீர உருவகப்படுத்திக் கொண்டார். ஆனால், சேகுவேராவிற்கும் விஜேவீரவிற்கும் உள்ள தூரம் மலைக்கும் மடுவிற்கும் உள்ளது போன்றதாகும். பொருளாதார நெருக்கடிகள், வேலையின்மை மற்றும் சமூக நீதி மறுப்புகளால் பாதிக்கப்பட்ட சிங்கள இளம் தலைமுறையினர் ஜே.வி.பி. யையும் அதன் தலைவர் றோகண விஜேவீரவையும் நம்பி அவர் கூறிய ஆயுத நடவடிக்கையைப் புரட்சி என நம்பிச் சென்று ஏமாந்தனர். 1971 ஆம் ஆண்டுக் கிளர்ச்சி இந்தியப் படைகளின் துணையுடன் சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியால் கொடூரமாக ஒடுக்கப்பட்டது. சுமார் இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர், யுவதிகள் மற்றும் ஆதரவான மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். விஜேவீர உட்பட பல தலைவர்கள் தொண்டர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பத்துப் பேருக்கும் நீதிமன்றம் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. விஜேவீர இதற்குள் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜே.வி.பி. கடும் அடக்கு முறையின் கீழ் நசுக்கப்பட்டது. 1971 கிளர்ச்சியில் பங்குபற்றிய பலர் குறிப்பிட்ட காலத்தில் அரசாங்கத்தில் பதவிகள் பெற்றதுடன், பலர் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டதுடன் தமது முன்னைய நிலைப்பாட்டிற்காக நொந்து ஜே.வி.பி. தலைமையை திட்டி நிராகரித்தும் கொண்டனர்.

1977 இல் பதவிக்கு வந்த ஜே.ஆர்., வீஜேவீரவை சிறையில் இருந்து விடுவித்து தனது அரசியல் காய் நகர்த்தல்களைச் செய்தும் கொண்டார். பின்பு ஆயுதப் போராட்டப் பாதையைக் கைவிட்டு பாராளுமன்றப் பாதைக்கு வந்ததாகக் கூறிக் கொண்ட விஜேவீர ஜனாதிபதித் தேர்தலிலும் பங்கு கொண்டு அதில் தோல்வியும் கண்டார். இதன் பின் இரண்டாவது தடவையாக ஆயுதக் கிளர்ச்சிக்குத் தயாரிப்புச் செய்த ஜே.வி.பி. 1987 - 89 காலப்பகுதியில் மிக மோசமான கொலைகளையும் மக்கள் விரோத வன்முறைகளையும் முன்னெடுத்தது. இறுதியில் ஜனாதிபதி பிரேமதாசாவின் ஆட்சிக் காலத்தில் ஜே.வி.பி. ஆயுதப் படைகளால் ஒடுக்கப்பட்டது.

சுமார் அறுபதினாயிரம் இளைஞர், யுவதிகளும் மக்களும் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் பேர் காணாமல் போயினர். இறுதியில் ஜே.வி.பி.யின் தலைமை உறுப்பினர்கள் விஜேவீர உட்பட கைது செய்யப்பட்டு உடனுக்குடன் கொல்லப்பட்டனர். அத் தலைமையில் உயிர் தப்பிய ஒருவர் மட்டுமே தற்போதைய தலைவர் சோமவன்ச அமரசிங்க ஆவார். அவரும் தலைமறைவாகி இந்தியா சென்று லண்டனில் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டார். பன்னிரண்டு வருடங்களுக்குப் பின்பே அவரால் நாடு திரும்ப முடிந்தது. 1971, 1987-89 ஆகிய இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளிலும் ஜே.வி.பி. தலைமை சுமார் இரண்டு இலட்சம் சிங்கள இளைஞர், யுவதிகள் மற்றும் ஆதரவான மக்களை ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை இயந்திரத்திற்கு பலி கொடுத்துக் கொண்டது என்பதை வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கவே செய்யும்.

இத்தகைய ஜே.வி.பி.யை நேர்மையான மாக்சிஸ சக்திகள் ஒருபோதும் மாக்சிஸவாதிகளாகவோ அல்லது இடதுசாரிகளாகவோ கணித்துக் கொண்டதில்லை. பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெறும்வரை செங்கொடிகளுடனும் சிகப்புச் சட்டைகள் தொப்பிகளுடனும் தோன்றி மக்கள் மத்தியில் தம்மை இடதுசாரிகளாகக் காட்டி வந்த ஜே.வி.பி.யினர் விரைவாகவே தமது சுயரூபம் செந்நிறம் பூசிய பேரினவாதிகள் என்பதை நிரூபித்துக் கொண்டனர்.

1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தேசிய மீட்பு முன்னணி என்ற பெயரில் முற்போக்கு முன்னணி என்ற அமைப்புடன் இணைந்து அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்றுக் கொண்டது ஜே.வி.பி. அதன்மூலம் அதே பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலபதி ஜனாதிபதித் தேர்தலிலும் பங்கு கொண்டார்.

இவ்வாறு படிப்படியாகப் பாராளுமன்ற அரசியலில் பங்கு கொண்டு அதேபாதையில் வேகமான வளர்ச்சியை ஜே.வி.பி. பெற்றுக் கொண்டது. உள்ளூராட்சித் தேர்தலிலும் ஜே.வி.பி.பங்கு கொண்டு பத்து ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. 2001 இல் 6 ஆசனங்களைப் பெற்று வளர்ச்சி கண்டது. அதன் காரணமாக சந்திரிகா அம்மையார் ஜே.வி.பி. யை அணைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைத் தோற்றுவித்தார். அந்த முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் ஜே.வி.பி.39 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதுடன், அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளையும் இரண்டு வருட காலத்திற்கு வகித்துக் கொண்டது.

அதன் பின்னர் தற்போதைய ஜனாதிபதி தயாரித்த மகிந்த சிந்தனையின் பங்காளி தாங்களே என்றும் ஜே.வி.பி. பீத்திக் கொண்டது.

ஆரம்பம் முதல் ஜே.வி.பி.யின் சிவப்புத் தோற்றத்தையும் வாய் வீச்சையும் தென்னிலங்கையின் இளம் தலைமுறையினரும் தொழிலாளர்கள் , விவசாயிகளும் நம்பினர் என்பது மறுக்கப்பட முடியாத ஒன்றாகும். அதாவது பழைய இடதுசாரிகள் எனப்பட்ட சமசமாஜ- கம்யூனிஸ்ட் கட்சிகள் பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலுக்குள் மூழ்கித் தமது சுயத்தை இழந்தனர். அத்துடன் தொழிலாளர், விவசாயிகளுக்கும் தேசிய இனங்களுக்கும் துரோகம் இழைத்தனர். அதனால், ஏற்பட்ட வெற்றிடத்தை ஜே.வி.பி. நிரப்பிக் கொண்டது. ஆனால், காலப்போக்கில் அதே பாராளுமன்ற சந்தர்ப்பவாத இனவாத அரசியல் சேற்றுக்குள் ஜே.வி.பி. இறங்கி சேற்றுச்சுகம் காணத் தொடங்கியது.

இத்தகைய எருமை மாட்டுச் சேற்றுச் சுகம் அனுபவித்து நிற்கும் ஜே.வி.பி.யினர் மத்தியிலேயே இப்போது நாய்ச் சண்டை வெளிப்பட்டு உச்சக் கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

தற்போதைய ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, கே.டி.லால் காந்த, அனுரகுமார திஸ்ஸநாயக்கா போன்றோர் ஒரு புறமாக நின்று வருகின்றனர். மொத்தம் 39 பாராளுமன்ற உறுப்பினர்களில் இவர்களுடன் 27 பேர் உள்ளனர். அதேவேளை வாய் திறந்தால் பேரினவாத வெறியைக் கக்கிவரும் விமல் வீரவன்சவுடன் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவ்வாறு இரு கன்னையாகப் பிரிந்து நின்று பரஸ்பரக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர். கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் விமல் வீரவன்ச தனது அர்ப்பணிப்பு, தியாகம் பற்றி தானே எடுத்துரைத்து தன் மீது கட்சித் தலைமை குற்றம் சாட்டுவதாகக் கூறினார். தன்னைப் பற்றியும் தனது மனைவி குழந்தைகள் பற்றி, மட்டுமன்றித் தனது தாடி, தலை, உடைகள் பற்றியும் விமர்சனம் செய்யப்படுவதாகவும் பரிதாபத்துடன் பேசினார். அடுத்த நாள் அவர் செய்தியாளர் சந்திப்பையும் நடாத்தி தன்னுடன் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதை உறுதிப்படுத்தினார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியும் சர்வதேச சக்திகளும் கூட்டுச் சேர்ந்து தன்னையும் ஏனையவர்களையும் ஜே.வி.பி.யில் இருந்து வெளியேற்றச் செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேவேளை ஜே.வி.பி.தலைமை, விமல் வீரவன்சவின் குழுவினரை அரசாங்கம் தம்முடன் இணைக்கும் முயற்சியில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது.

இவற்றின் நடுவே பாராளுமன்ற உறுப்பினர்களைத் தடுத்து வைத்தல், பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களைக் கடத்துவது, விமல் வீரவன்சவின் ஆதரவாளர்களைத் தாக்குவது என நடவடிக்கைகள் விரிவுபெற்று வருகின்றன.

மகிந்த சிந்தனையின் கீழ் சகல எதிர்க்கட்சிகளுமே உடைக்கப்பட்டு வருகின்றமை புதுமையல்ல. அதே வழியில் தான் விமல் வீரவன்சவும் அவரது குழுவினரும் அரசாங்கத்தின் நம்பிக்கைக்குரியவர்களாகி உள்ளனர். ஏற்கனவே விமல் வீரவன்ச பேரினவாத வெறியையும் யுத்த ஆவேசத்தையும் கொண்டிருப்பவர். மிகவும் சுகபோக வாழ்வும் பாராளுமன்றப் பதவி அனுபவிப்பும் பெற்ற ஒருவர். அவருக்குக் கிடைத்து வந்த குறுக்கு வழிச் சம்பாத்தியங்கள், அன்பளிப்புகள் , சொகுசுத்தனங்கள் யாவும் இந்த உட்கட்சிச் சண்டையில் விலாவாரியாக வரவே செய்யும். அவரது கையடக்கத் தொலைபேசியின் பெறுமதி ஒன்றரை இலட்சம் எனவும் அதனை ஒரு பெரும் வர்த்தகர் அன்பளிப்புச் செய்ததாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. இப்படி இப்படி எத்தனை சமாச்சாரங்கள்?

இவையாவும் ஜே.வி.பி.யின் பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்க சார்பான சுயரூபத்தையே எடுத்துக்காட்டி வருகின்றன. இனிமேலாவது ஜே.வி.பி.க்கு மாக்சிச இடதுசாரிப் போர்வை போர்த்திக் காட்டுவதை ஊடகங்கள் நிறுத்திக் கொள்ளும் என நம்பலாமா?

Email this page Your Opinion Print this page
தீண்டத்தகாத உணவா சோறு?
உலக இஸ்லாமிய மாநாடு ஒரு பார்வை
ஜே.வி.பி. யில் ஏற்பட்டிருக்கும் பிளவு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com