Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 19, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
உலக இஸ்லாமிய மாநாடு ஒரு பார்வை
[19 - April - 2008] [Font Size - A - A - A]
வெற்றி திருமகள்

அனைத்துலக இஸ்லாமிய நாடுகளின் மகாநாடு கடந்த மார்ச் மாதம் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் ஆபிரிக்க நாடான செனகல் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

உலகின் வலிமை மிக்க நாடுகளால் அடிக்கடி எழுப்பப்படும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்னும் கோஷமும் செயற்பாடுகளும் இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பின்றி தனித்து மேற்கு சார் அணிகளால் சாதிக்க முடியாது என்பது அரசியல் நோக்கர்களது ஆணித்தரமான கருத்தாகவிருக்கின்றது. அந்த வகையில் நடந்து முடிந்த இஸ்லாமிய நாடுகளின் மகாநாடு பன்னாட்டு அரசியலில் முக்கியத்துவம் பெறுகின்றது.

மறுபக்கத்திலிருந்து நோக்கும்போது பன்னாட்டு அரசியல் தளத்தில் குறிப்பாக மேற்குத் தளத்தில் அதிலும் குறிப்பாக மேற்கு ஊடகங்களில் மேலோங்கி வரும் இஸ்லாமிய மதக் கருத்துக்களுக்கு எதிரான பரப்புரைகளை முறியடிக்க வேண்டிய நிலைக்கு உலக இஸ்லாமிய நாடுகள் தள்ளப்பட்டுள்ளன. அதேவேளை, கருத்துச் சுதந்திரம் என்பது ஏனைய மதங்களை இழிவுபடுத்தவா என்ற கேள்வியையும் உலக இஸ்லாமிய நாடுகள் எழுப்புகின்றன.

உலக இஸ்லாமிய அமைப்புப்பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் சிறிது நோக்குவோமேயானால், 1969 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய நாடுகளின் அமைப்பானது தற்போது 57 இஸ்லாமிய நாடுகளின் உறுப்புரிமைகளைக் கொண்டு இயங்குகின்றது. உலகின் அனைத்துக் கண்டங்களிலும் உள்ள இஸ்லாமிய நாடுகள் இவ் அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ளன. இவ் அமைப்பு உலகில் உள்ள 21 விழுக்காடு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு 70 விழுக்காடு எண்ணெய் வளத்தைக் கொண்ட நாடுகளையும் கொண்டிருக்கின்றது. உலகிற்கு தேவையான 50 விழுக்காடு எரிவாயு வளத்தையும் இந்நாடுகள் கொண்டிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

உலகின் பொருளாதார மாற்றத்திற்கு வித்திடும் தகைமை உலக இஸ்லாமிய நாடுகளின் கைகளில் தங்கியுள்ளது என்பது நிதர்சனமானது. இப்பாரிய இஸ்லாமிய அமைப்பானது உலகில் வாழும் கிறிஸ்தவ அரசுகளுடன் இணைந்து, உலக சமாதானத்தை முன்னெடுக்கவும் இருபக்கத்தில் நிலவும் பரஸ்பர நம்பிக்கையின்மையை நீக்கவும் நடப்பு மாநாட்டில் கலந்தாலோசித்துள்ளது. இரு பக்கத்திலிருந்தும் உயர்மட்டக் குழுக்கள் இணைந்து காத்திரமான திறந்த ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும் இம்மகாநாட்டில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இஸ்லாமிய உலகத்துக்கும் கிறிஸ்தவ தலைவர்களுக்கும் இடையே திறந்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்புக் கடிதங்களை 138 இஸ்லாமிய தலைவர்கள் கிறிஸ்தவ அரசுத் தலைமைகளுக்கும் மத நிறுவனங்களுக்கும் அனுப்பியிருந்ததை நாம் இந்நேரத்தில் நினைவுகூருதல் பொருத்தமுடையது.

2006 ஆம் ஆண்டு பாப்பரசர் பெனடிக் அவர்களால் இஸ்லாமிய கோட்பாடுகள் வன்முறைகளை பரப்புகின்றன என சொல்லப்பட்ட கருத்துகளும் டென்மார்க்கில் 17 பத்திரிகைகள் இறை தூதர் முகமது நபி அவர்களை அவமானப்படுத்தும் வகையில் வரையப்பட்ட கேலிச் சித்திரங்களும் உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய மக்களை கொதித்தெழவைத்தமை நாம் அறிந்ததே. இத்தகைய தொடர்ச்சியான மேற்குலகின் இஸ்லாமிய கோட்பாடுகள் மீதான எதிர்க் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமைப்பாட்டிற்கு இஸ்லாமிய நாடுகள் உட்படுத்தப்பட்டிருக்கின்றன. அதேவேளை, இஸ்லாமிய கோட்பாட்டாளர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படும் செயற்பாட்டையும் வன்மையாக இஸ்லாமிய நாட்டுத் தலைவர்கள் இம்மகாநாட்டில் கண்டித்துள்ளனர்.

அதேசமயம், இஸ்லாமிய கருத்துகளை மையமாகக் கொண்டு தீவிரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்புகளையும் இஸ்லாமிய நாட்டுத் தலைவர்கள் கண்டிக்கத் தவறவில்லை என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது. இதைத் தவிர மேற்குலகத்தாலும் ஊடகங்களாலும் அடிக்கடி கண்டனத்துக்குள்ளாக்கப்படும் `ஷரிஆ' எனும் சட்டம் பற்றியும் இம்மகாநாட்டில் கலந்துரையாடப்பட்டிருக்கின்றது. `ஷரீஆ' சட்டம் உலகளாவிய ரீதியில் நடைமுறையிலிருக்கும் பொதுச்சட்டம், குடியுரிமைச் சட்டம் போன்ற சட்டங்களுக்கு சமமானதாக தற்போது சில இஸ்லாமிய நாடுகளில் நடைமுறையிலிருக்கின்றது. இச்சட்டத்தை இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் அமுலிலிருக்கும் அந்நாட்டின் சட்ட அமைப்புக்களுடன் இணைத்து செயற்படுத்துவது பற்றியும் இம்மாநாட்டில் பேசப்பட்டிருக்கின்றது.

`ஷரீஆ' சட்டத்திற்கு எதிராக மேற்கு நாடுகள் பல எதிர்க் கருத்துகளை தெரிவித்து வந்திருந்தமை கடந்த காலங்களில் ஊடகங்களில் பரவலான செய்திகளாக வெளிவந்திருந்தன. மனித உரிமை அமைப்புக்களும் `ஷரிஆ' சட்டத்திற்கு எதிரான கருத்துகளை முன்வைத்திருந்தன. குறிப்பாக அரசியல், பொருளாதாரம், சமூகம் என சகல மட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் இச்சட்டத்தின் மூலம் வழங்கப்படும் தண்டனைகள் பற்றியே உலகின் மனித உரிமை அமைப்புகள் தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வருவது கவனிப்பிற்குரியது. தற்போதைய உலக நீரோட்டத்திற்கு அமைய `ஷரீஆ' சட்டத்தை எவ்வகையில் சீர்திருத்தி உலக நாடுகளில் அறிமுகப்படுத்தலாம் என்பது பற்றியும் இம்மகாநாட்டில் ஆராயப்பட்டிருக்கின்றது. பிரான்ஸ் நாட்டில் 6 மில்லியன் இஸ்லாமியர்களும் அமெரிக்காவில் 7 மில்லியன் இஸ்லாமியர்களும் பெல்ஜியம் நாட்டில் 4 விழுக்காடு இஸ்லாமியர்களும் வாழ்கின்றனர். பெருந்தொகையில் இஸ்லாமியர்கள் வாழும் இத்தகைய மேற்கு நாடுகளிலும் `ஷரீஆ' சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அந்நாட்டின் அரசுத் தலைமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஆலோசனைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.

கொசோவோ தனியரசுப் பிரகடனத்தை இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு அங்கீகரிக்க வேண்டுமென அல்பானிய நாட்டு அரசுத் தரப்பு எகிப்திய அரசுத் தலைமையை முன்மொழியுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.

கொசோவோ நாட்டு மக்களும் அல்பானிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இந்நேரத்தில் நினைவூட்டத்தக்கது. அத்துடன், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மிகப்பெரிய இஸ்லாமிய நாடு அல்பானியா என்பதும் குறிப்பிடத்தக்கது. அல்பானியா முன்னாள் யூகோஸ்லாவியா நாட்டிலிருந்து பிரிவடைந்து, 1992 ஆம் ஆண்டு இஸ்லாமிய அமைப்பில் இணைந்திருந்தது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

பணக்கார அரேபிய இஸ்லாமிய நாடுகளைத் தவிர ஏனைய சகாரா பாலைவனத்தை அண்டியுள்ள இஸ்லாமிய ஆபிரிக்க நாடுகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் அடங்குகின்றன. அபிவிருத்தியடைந்த இஸ்லாமிய நாடுகள் வசதி குறைந்த இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து கூட்டாக பல துறைகளிலும் செயற்பட முன்வர வேண்டும் என்றும் இம்மகாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது.

வருடாவருடம் அபிவிருத்தியடைந்த நாடுகளில் வாழும் ஒவ்வொரு இஸ்லாமியரும் கட்டாயமாக வறுமைப்பட்ட இஸ்லாமிய நாடுகளுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என செனகல் வெளியுறவுத்துறை அமைச்சர் மாநாட்டில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்லாமிய நாடுகளின் அறிவியல் துறை வளர்ச்சி கருதி விஞ்ஞான தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அறிவியல் துறையை விரிவுபடுத்துவதற்கான 10 வருடத் திட்டமொன்று வகுக்கப்பட்டிருக்கின்றது.

அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற துறைகளில் பெரும்பாலான மேற்கு நாடுகளுக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே காணப்படும் இடைவெளியை குறைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.

18 அகவைக்கும் 24 அகவைக்கும் இடைப்பட்ட வயதெல்லையுடைய 30 விழுக்காடு இஸ்லாமிய மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவது எனத் திட்டமிடப்பட்டிருக்கின்றது. பத்து வருடகால இத்திட்டமானது கடந்த இருவருட காலமாக சிறப்பாக செயல்பட்டு வருவது சுட்டிக்காட்டத்தக்கது. பெருமளவு இஸ்லாமிய பெண்கள் நவீன அறிவியல், தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஈடுபடக்கூடிய திட்டங்களும் வகுக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய இஸ்லாமிய தோழமை செயற்பாட்டிற்கான பொது நிதி 2007 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் திறக்கப்பட்டிருக்கின்றது. 10 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஆரம்பத் தொகையாக இஸ்லாமிய தோழமை வங்கிக் கணக்கில் இடப்பட்டிருக்கின்றது. இவ்வங்கிக் கணக்கில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சவூதி அரேபியாவும் 300 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை குவைத் நாடும் வழங்கியுள்ளது.

தவிர செனகல் மகாநாட்டில் சாட் நாட்டிற்கும் சூடான் நாட்டிற்கும் இடையே காணப்படும் முறுகல் நிலையை தணிக்கும் வகையில் இரு நாட்டிற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றும் இம்மகாநாட்டில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சூடான் நாட்டின் டர்வர் போராளி அமைப்புக்கு சார்ட் படைத்தரப்பு படைத்துறைப் பயிற்சி அளிப்பதாக சூடான் நாடு குற்றம் சுமத்தி வருகின்றது. அதேவேளை, சாட் நாட்டு போராளி அமைப்புக்கு சூடான் நாட்டு படைத்துறை இராணுவத் தளபாடங்களை வழங்குவதாக சாட் நாட்டின் அரசுத் தரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது. இத்தகைய பின்புலத்தில் இரு நாடுகளுக்குமிடையேயான மற்றுமொரு சமாதான ஒப்பந்தத்திற்கு செனகல் மாநாடு வழி வகுத்துள்ளது.

மொத்தமாகப் பார்க்கும்போது உலகில் உள்ள ஏனைய அமைப்புகளான நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் பொதுநலவாய, ஆபிரிக்க ஒன்றியம், சார்க், ஆசியான் அமைப்புகள் உட்பட உலகில் உள்ள பல்வகைப்பட்ட பொருளாதார அமைப்புகளுடன் ஒப்பிடும்போது உலக இஸ்லாமிய அமைப்பானது ஓர் பலமான அமைப்பு என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. அதேவேளை, தற்போதைய உலக ஒழுங்கு இஸ்லாமிய நாடுகளை கூறுபோட்டிருக்கின்றன என்பதுவும் யதார்த்தமானது. ஆயினும், இவ் இஸ்லாமிய அமைப்பு வலுப்பெற்று செயற்படுமாயின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் என்பது மனிதநேயமுள்ளவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. நன்றி- பதிவு

Email this page Your Opinion Print this page
தீண்டத்தகாத உணவா சோறு?
உலக இஸ்லாமிய மாநாடு ஒரு பார்வை
ஜே.வி.பி. யில் ஏற்பட்டிருக்கும் பிளவு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com