ராய்ட்டர் செய்திச் சேவையின் படப்பிடிப்பாளர் ஒருவர் காஸா எல்லையில் இஸ்ரேல் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
இஸ்ரேலிய கவசவாகனம் ஒன்றை தனது காரிலிருந்தவாறு புகைப்படம் எடுக்க முற்பட்டபோதே இவர் மீது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், இத்தாக்குதலின்போது மேலும் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 23 வயதுடைய படல் ஹானா என்ற செய்தியாளரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஹானாவின் வீடியோ கமராவில் இருந்து மீட்கப்பட்ட ஒளிப்பதிவு நாடாவில் இஸ்ரேல் கவச வாகனத்திலிருந்து குண்டுகள் வெளியேறுவதும் இறுதியாக வெளியேறிய ஒரு குண்டினைத் தொடர்ந்து புகைமண்டலம் காணப்படுவதுடன், அந்த ஒளிநாடா வெற்றிடமாக உள்ளது.
இதனை ஆதாரமாகக் கொண்டே இஸ்ரேல் இராணுவத்தினர்தான் இவர்மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராய்ட்டர் நிறுவனத்தின் மற்றுமொரு செய்தியாளரான வபா அபு மிஷ்யட் என்ற 25 வயதுடைய இளைஞர் ஒருவரும் இத்தாக்குதலில் காயமடைந்து காஸா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், அந்த ஊடகவியலாளரின் மரணம் தொடர்பாக இஸ்ரேல் இராணுவத் தரப்பிலிருந்து எதுவிதமான அறிக்கைகளும் இதுவரை வெளியாகவில்லை.
அதேவேளை, இச்சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இஸ்ரேல் இராணுவப் பேச்சாளர் தெரிவிக்கையில்;
மூன்று இஸ்ரேல் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இப்பகுதியில் இருதரப்பினரிடையேயும் கடும் மோதல் நிலவி வருகின்றது.
இந்நிலையில், இவரின் மரணம் குறித்து உறுதியான தகவல் எதனையும் எளிதில் கூறிவிட முடியாது.
இவரின் மரணத்திற்கு இஸ்ரேல் இராணுவத்தினர் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோமெனத் தெரிவித்தார்.