* பவ்ரல் அமைப்பு தெரிவிப்பு
கிழக்கில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலின் கண்காணிப்புப் பணிகளில், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் உட்பட 2500க்கும் அதிகமான பணியாளர்களை தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்போவதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் மே பத்தாம் திகதி நடைபெறவுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக பவ்ரல் அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெட்டியாராச்சி கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கிழக்கில் சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்காக பவ்ரல் அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அதற்காக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் தலா ஒவ்வொரு இணைப்பு அலுவலகங்களும் அம்பாறையில் இரு இணைப்பு அலுவலகங்களும் ஸ்தாபிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை பவ்ரல் மேற்கொண்டுள்ளது.
தேர்தலின் போது நடைபெறும் வன்முறைகள், மோசடிகள் போன்றவற்றின் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடனேயே இவ் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன.
அந்த முறைப்பாடுகளின் முக்கியத்துவத்தை பொறுத்து அவை தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை தேர்தல் ஆணையகம் மற்றும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட உயர் அமைப்புகள் மேற்கொள்ளும்.
அத்துடன், சர்வதேச கண்காணிப்பாளர்களின் மூன்று நடமாடும் குழுக்கள் ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குழு வீதம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவர்களுடன் தேர்தல் நடைபெறும் நாட்களில் மேலதிகமாக ஒவ்வொரு குழுவிற்கும் தலா 20 பேர் கொண்ட குழு இணைக்கப்படவுள்ளதெனத் தெரிவித்தார்.
கிழக்கிலுள்ள 1022 வாக்குச்சாவடிகளில் தலா இருவர் வீதம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதற்காக 2500 உள்ளூர் கண்காணிப்பாளர்களுக்கு தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அத்துடன், இதற்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு, குறிப்பிட்டதொரு தேர்தல் தொகுதியின் கண்காணிப்பு பணிகளுக்காக அப்பகுதியின் மதகுருமார்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட விசேட நடமாடும் குழுக்கள் இரண்டு ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ளன.
மேலும், பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து மேலும் சில வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பதற்கும் தேர்தல் ஆணையகம் முயற்சி எடுத்துள்ளது.
இருந்தாலும் இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்கள் தேர்தல் ஆணையாளரால் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
மாகாணசபைத் தேர்தலின் தபால் மூலவாக்களிப்புகள் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் குறிக்கப்பட்ட இடங்களில் நடைபெறவுள்ளன.
தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்புகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 4427 பேரும் அம்பாறையிலிருந்து 9468 பேரும் திருகோணமலையிலிருந்து 8517 பேரும் அடங்கலாக மொத்தமாக 22,412 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஏனைய 982,721 பேருக்குரிய வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட இருப்பதுடன், அவை விநியோகம் செய்து முடிப்பதற்கான இறுதித் திகதி மே இரண்டெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.