கிழக்கு மாகாண சபைக்காக நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பது ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள தமிழ், முஸ்லிம் ஆதரவாளர்களுக்கு அது செய்துள்ள மாபெரும் துரோகமாகும்.
இவ்வாறு கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவருமான எம்.எம்.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பத்திரிகைளுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
கல்முனைத் தொகுதி மக்கள் நீண்டகாலமாக ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்களாக இருந்து வந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச, டி.பி.விஜயதுங்க தொடக்கம் ரணில் விக்கிரம சிங்க வரையுள்ள காலங்களில் இப்பிரதேசத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் ஐ.தே.க. கட்சியை பெரும்பான்மையாக ஆதரித்து வந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர் ஐ.தே.கட்சியில் அமைச்சராக இருந்து அம்பாறை மாவட்ட கரையோர தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் கட்சிக்கு பெரும் செல்வாக்கை பெற்றுக் கொடுத்திருந்தார்.
1994 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற கட்சிகளுடன் நேரடியாக ஐ.தே.கட்சி போட்டியிட்டு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளில் நிந்தவூர் பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபைகளை கைப்பற்றியதுடன் கல்முனை பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சியில் போட்டியிட்ட 19 வேட்பாளர்களில் 8 உறுப்பினர்களை ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் வாக்களித்து வலுவான உறுதிப்பாடான ஒரு எதிர்க்கட்சியாக தெரிவு செய்த வரலாற்று உண்மையை ஐ.தே.கட்சியின் தலைமை உயர்பீட உறுப்பினர்கள் எவராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
கல்முனை பிரதேச சபையில் எதிரணித் தலைவராக நான் இருந்து ஐ.தே.கட்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் செய்த பணிகளையும் பங்களிப்புகளையும் ஐ.தே.கட்சி தலைமையும், உயர்பீடமும் மறக்க முடியாது. இதுபோன்றே ஐ.தே.கட்சியின் மீது தமிழ் முஸ்லிம் மக்கள் நம்பிக்கை வைத்து நடந்துவந்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.கட்சியின் தலைமையை ஏற்ற காலம் முதல் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை ரவூப் ஹக்கீம் பொறுப்பெடுத்த காலம் தொடக்கம் முஸ்லிம் காங்கிரஸின் பசப்பு வார்த்தைகளுக்கு ஐ.தே.கட்சி தலைமை மயங்கி நீண்டகாலம் கட்சிக்காக உழைத்த ஐ.தே.கட்சி உறுப்பினர்களை படிப்படியாக காலத்துக்குக் காலம் இழந்து வந்த வரலாறுகளும் கவலைக்குரிய விடயமாகும்.
நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.கட்சியில் வேட்பாளராக போட்டியிட கட்சியின் தலைமைத்துவத்தாலும் உயர்பீட உறுப்பினர்களாலும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருந்த ஐ.தே.கட்சியின் நீண்ட கால உறுப்பினரும் கல்முனை அமைப்பாளரும் அம்பாறை மாவட்ட ஐ.தே.கட்சியின் செயலாளரும் முன்னாள் கல்முனை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான என்னை இறுதி நேரத்தில் ஷ்ரீ.ல.மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமின் சதித்திட்டத்தினால் போட்டியிட முடியாமல் கட்சி தடைசெய்தது. ஐ.தே.கட்சிக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவாகும்.
நான் முன்னாள் அமைச்சர் மன்சூர் காலம் தொடக்கம் 1994 ஆம் ஆண்டு கல்முனை பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சி தெரிவான வரை கட்சிக்காக பெரும் பாடுபட்டு வந்ததை ஐ.தே.கட்சி தலைவர் தொடக்கம் ஆதரவாளர்கள் வரை அறிவர். இப்படிப்பட்ட என்னை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கும் வலிமை ரவூப் ஹக்கீமுக்கு இருக்குமானால் ஐ.தே.கட்சியின் தலைமை ஷ்ரீலங்கா மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அடிமைப்பட்டுவிட்டதா என்ற சந்தேகம் ஆதரவாளர்கள் மத்தியில் வலுவாக ஏற்பட்டுவிட்டது என கல்முனைப் பிரதேச ஐ.தே.க. தமிழ் முஸ்லிம் ஆதாவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.