* மூதூர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் கடிதம்
கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மிக மோசமாகவும் தமிழ் மக்களுக்கு பாதகமாகவும் காணப்படுவதால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கையெடுக்கக் கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மு. சௌந்தரராஜா அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்ததில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கில் 24 தமிழ்க் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மற்றும் திருகோணமலை நகரம் தொடக்கம் குச்சவெளி வரை கரையோர மக்கள் 30 ஆயிரம் பேர் வரை இந்தியாவில் அகதிகளாக உள்ளனர். மனித வாழ்வின் மிகத் துயரம் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தல் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல.
தினமும் ஆட்கடத்தல், படுகொலைகள், கப்பம் பெறுதல், கொள்ளையடித்தல் போன்ற படு பாதகச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அரச படைகள் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை. மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை இங்கு உள்ளது. இதுவரை உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிட்டவர்கள் உட்பட 7 பேர் கிழக்கில் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் பதவி விலகியுள்ளனர்.
புதிய உறுப்பினர்களை நியமிக்க முடியாத நிலைமை, இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
இவ்வாறான கிழக்கு மாகாண நிலைமையில், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையே தீர்க்க முடியாத நிலையில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் நிம்மதியற்ற வாழ்வில் தேர்தலில் வாக்களிக்கும் நிலைமை இங்கு இல்லை. இன்று தமிழ் மக்கள் தங்களிடம் தேர்தலைக் கோரவில்லை. தமிழ் மக்கள் தங்களது சொந்த வாழ்விடங்களில் நிம்மதியாகப் பாதுகாப்பாக வாழவே விரும்புகின்றனர். ஆகவே, தேர்தலை ஒத்திப் போட்டுத் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு உதவும்படி கேட்டுக்கொள்கின்றேன்.