* மாத்தளை மாநகர சபை ஐ.தே.க. உறுப்பினர்
பொருளாதாரச் சுமையாலும் யுத்த சூழ்நிலையாலும் பெரும்பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களை மீட்டெடுக்க கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிட முன்வந்துள்ள ஷ்ரீ.ல.மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு நாட்டு மக்கள் அனைவருமே நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளனர் என மாத்தளை மாநகர சபையின் ஐ.தே.கட்சி உறுப்பினர் ரோசான் டி சில்வா தெரிவித்தார். கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற மாத்தளை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேற்படி கூட்டம் மாத்தளை மாநகர பிதா முகமது ஹில்மி கறீமின் தலைமையில் நகர சபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது;
"அதிகரித்துவரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இவ்வருடம் தமிழ், சிங்கள மக்கள் சித்திரைப் புத்தாண்டை கொண்டாட முடியாமல் திண்டாடுகின்றனர். ஜனாதிபதியோ, பிரதமரோ, அமைச்சர்களோ அதனையிட்டு எள்ளளவும் கவலைப்படாது செயற்பட்டு வருகின்றனர்.
எனவே, ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்புவைத்துக் கொண்டுள்ள பொ.ஐ.முன்னணியின் மாவட்ட அமைப்பாளர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் எதிர்நோக்கி வரும் பாதிப்புக்களை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.
கடந்த வருட டிசம்பர் மாத நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மலர் வளையம் வைக்கப்பட்டதையடுத்தே அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அன்றைய தினம் முதல் இன்று வரை அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமாக 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இருதரப்பிலும் புத்திஜீவிகள் பலரும் கொலை செய்யப்பட்டு விட்டனர். எனவே, இந்த படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
எதிர்க் கட்சி தலைவர் டல்ஜித் அலிவிகார பேசும்போது;
"நான் இச்சபைக்கு வந்த நாள் முதற்கொண்டு இச்சபையின் மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் செயலுரு பெற வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ளேன். ஆனால், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் கட்டாயம் செயலுருப்பெற வேண்டும். அண்மையில் சட்டவிரோத பெயர் பலகைகள் அகற்றப்பட்ட போது ஐ.தே.க.வின் ஆதரவாளர்களான வர்த்தகப் பிரமுகர்கள் திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டுள்ளனர். சகலருக்கும் சமமாக சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோன்று புதிய பொதுச் சந்திக் கட்டிடம் இ.போ.ச. பஸ் தரிப்பிடம், முச்சக்கரவண்டி சாரதிகள், நடைபாதை வர்த்தகர்கள் ஆகியவை தொடர்பான பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ளது. நகர பிதாவின் அதிகாரத்தை வேறு சிலர் துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். நகர சபைக்கு சொந்தமான வளங்களும் சூறையாடப்படுவதுடன் வேறுசிலரால் அனுபவிக்கப்பட்டு வருகிறது. இவ்விடயங்களின் நகர பிதா கூடிய கவனம் எடுக்கவேண்டும்" என்றார்.
ஜே.வி.பி. நகர சபை உறுப்பினர் ய.பண்டாரநாயக்க பேசும்போது;
"எமது கட்சியின் பிரசார செயலாளர் விமல் வீரவன்சவிற்கு எதிராக கட்சியின் நிர்வாக சபையால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது உண்மை. எமது கட்சி மிகவும் கட்டுக்கோப்பான கட்சியாகும். எந்தவொரு உயர்பதவி வகிப்பவரானாலும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு முரணாக நடக்கும்போது அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, விமல் வீரவன்ச தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானம் ஊடகங்கள் மூலம் உரிய நேரத்தில் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். 1978 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நாட்டை ஆட்சி செய்தவர்களின் துஷ்பிரயோகங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமை, இலஞ்சம், ஊழல், வீண் விரயம் போன்றவற்றின் காரணமாகவே இன்று வாழ்க்கை சுமை அதிகரித்துள்ளது. இதற்கு குறிப்பிட்ட ஒரு தரப்பினரை மட்டும் குறை கூற முடியாது. நாட்டை ஆட்சி செய்த அனைவருமே இதற்கான பொறுப்பை ஏற்று கொள்ள வேண்டும்" என்றார்.
பொ.ஐ.மு. உறுப்பினர் ரோகன குமார ஹெட்டிபொல பேசும்போது;
"கடந்த 7 மாதமாக மூடப்பட்டு கிடக்கும் எமது வாடிவீடு திறக்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் தலையீடே மூல காரணமாகும். அது இல்லாதிருக்குமானால் இதனை ஏற்கனவே திறந்திருக்க முடியும். இந்த வாடிவீடு மூடப்பட்டுள்ளதால் நகர சபைக்கு மாதாந்தம் கிடைத்த பல லட்சம் ரூபா வருமானம் இல்லாமல் போயுள்ளது" என்றார். உறுப்பினர்கள் பலரும் உரையாற்றிய பின் நகர பிதா முகமது ஹில்மி கரீம் பதிலுரையாற்றியபோது;
"சில நகர சபை உறுப்பினர்கள் நகர சபைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு உரையாற்றுகின்றார்கள். இது வருந்தத்தக்கதாகும். மக்களுக்கு சேவையாற்றவே நாம் அனைவரும் இச்சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளோம். எனவே, நாம் அனைவரும் கட்சி பேதங்களையும் கருத்து வேறுபாடுகளையும் தனிமனித கோபதாபங்களையும் ஓரம் கட்டி வைத்துவிட்டு கருத்தொருமித்து மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும். இதைப்போன்று நகர அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளும் போதும் உறுப்பினர்கள் அனைவரும் எமக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்றார். இக்கூட்டத்தின் போது படுகொலை செய்யப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் மறைவுக்கு அனுதாபத் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பலரும் உரையாற்றினார்கள்.