*மெய்யியல் துறை விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர்
இன்றைய வர்த்தகச் சமூகத்தின் வியாபாரப் போட்டிகளுக்கு ஈடுகொடுப்பதற்கு மாணவர்களுக்கு கணினி அறிவை வழங்குதல் வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறை மற்றும் உளவியற்துறை விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர் தெரிவித்தார்.
அண்மையில் அ/புபோகம என்ற என்ற இடத்தில் `த பிரைட்' கணினி கற்கை நிலையப் பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது;
எதிர்காலத்தில் மாணவர்களின் தொழில் வாய்ப்பு அவர்கள் பெற்றுள்ள கணினி அறிவிலேயே தங்கியுள்ளது. இன்று பாடநெறிகள் பாரிய மாற்றம் கண்டுள்ளன. சாதாரண பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை கணினிக் கல்வி அவசியப்படுகிறது. கணினி அறிவு, ஆங்கில கல்வி என்பன மிக அத்தியாவசியமானவையாக உள்ளன.
இன்று அரச துறையை விட தனியார் துறையில் நல்ல வேலை வாய்ப்புக்களும் கவர்ச்சியான கொடுப்பனவுகளும் உண்டு. இவற்றிற்கு கணினி மற்றும் ஆங்கில அறிவு அவசியமாகிறது.
தனியார்துறையில் காணப்படும் கணினி கற்கை தொடர்பான பௌதீக வளங்களும் அரச பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடத் திட்டங்களும் இரு துருவங்களாக உள்ளன. இவை ஒன்றிணைந்தால் மாணவர்கள் நன்மையடைவர் என்றார்.