* ஆனந்த சங்கரி
வன்னிப் பகுதியில் விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் இரவுநேர தாக்குதல்களை நிறுத்தக்கோரி, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவசர கடிதமொன்றை எழுதியுள்ளார்.
இரவுநேர தாக்குதல்களால் மக்கள் எதிர்கொண்டுள்ள அவலங்கள் குறித்து அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இரவுநேர தாக்குதல்களின்போது அப்பாவி மக்கள் தமக்கான பாதுகாப்பைத் தேடிக்கொள்ள முடியாத நிலையில் இத்தாக்குதல்களின் போது வீணே கொல்லப்படுகின்றனர்.
பகல் வேளைகளிலேயே இவ்வாறான தாக்குதல்களில் இருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள முடியாது மரணிக்க வேண்டி ஏற்படுகின்ற இக்கட்டான நிலைமைகள் பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்தேறியிருப்பதை தாங்கள் அறிவீர்கள்.
சாதாரணமாக தாக்குதலில் ஈடுபடும் ஜெட் விமானங்கள் வானத்தில் பறக்கும் சந்தர்ப்பங்களில் சிறுவர்களும் பெண்களும் அந்த அதிர்வொலியால் காதை அடைத்துக்கொண்டு உயிரைக் காப்பாற்ற ஓடி ஒளிந்துகொள்ளும் நிலைமைகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.
ஏற்கனவே, பல தடவைகள், வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பல தடவைகள் தங்களிடம் கோரியுள்ளேன்.
அப்பகுதியில் வாழும் மக்களால் இனியும் விடுதலைப் புலிகளின் அக்கிரமங்களைப் பொறுக்க முடியாது. யுத்தமுனையில் தம்பிள்ளைகளில் நூற்றுக்கணக்கானவர்களை இனியும் அவர்கள் இழக்கத் தயாராக இல்லை. தம் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் இழப்பேற்படாது தம்மை விடுவிக்கும் ஓர் நட்புறவுடன் செயற்படக்கூடிய இராணுவத்தை அவர்கள் வரவேற்கத் தயாராக உள்ளனர். ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் அவர்களிடம் இத்தகைய ஓர் வேண்டுகோளை நான் முன்பு ஒருமுறை விடுத்திருந்தேன்.
இராணுவ நடவடிக்கையால் ஒரு அப்பாவி உயிர் தன்னும் இழக்கப்படக் கூடாது. இந்த நிலைப்பாடே தொடர்ந்து இருக்க வேண்டுமென்ற உறுதிப்பாட்டை எமக்குத் தாருங்கள். கட்டுநாயக்க விமான நிலையம் புலிகளால் தாக்கப்பட்ட போது கொழும்பில் வாழ்ந்த நாம் எத்தகைய கலக்கத்துடன் வாழ்ந்தோம்.
வன்னி வாழ் மக்கள் நிரந்தர பயம், பீதியுடன் தான் வாழ்கின்றனர். இரவு வேளையில் நடைபெறும் விமானத் தாக்குதல்கள் அவர்களை மேலும் பீதி அடையவே செய்யும். ஆகவே, தயவுசெய்து இரவுவேளை தாக்குதல்களை உடன்நிறுத்த நடவடிக்கை எடுக்கவும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.