* சிவசக்தி ஆனந்தன் எம்.பி. கடிதம்
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறையை உடன் நிவர்த்தி செய்யுமாறும் தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றுவோரில் ஐவரினது சேவை நீடிப்பிற்குரிய உத்தரவினைப் பிறப்பித்துக் கல்லூரியின் கல்விச் செய்ற்பாட்டில் தோன்றவுள்ள பெரும் இடர்பாட்டினை நீக்குவதற்கு பொருத்தமான நடவடிக்கைக்கு பணிக்குமாறும் கோரி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அனுப்பி வைத்துள்ள அவசரக் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; இக்கல்லூரியில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை மிகப்பெரும் பிரச்சினையாக உள்ளது. இங்கு சுமார் 750 மாணவ ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கு ஏறக்குறைய 50 விரிவுரையாளர்கள் தேவைப்படுகின்றபோதும் தற்போது பீடாதிபதி, உப பீடாதிபதிகள் தவிர, 11 நிரந்தர விரிவுரையாளர்களும் 8 இரண்டாம்நிலை விரிவுரையாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
தற்காலிகமாக மாகாணக் கல்வி அமைச்சிலிருந்து விடுவிக்கப்பட்டு கடமையாற்றும் 8 இரண்டாம் நிலை விரிவுரையாளர்களில் ஐவரினது சேவையினை நீடிக்காதவிடத்து அவர்கள் மீண்டும் மாகாணக் கல்வி அமைச்சுக்கே கடமைக்குச் செல்வார்கள், அதனால் இக்கல்லூரி மூடப்படவேண்டிய நிலைக்கு சென்று விடும் அபாயம் உள்ளது.
நிரந்தர விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும்வரை இரண்டாம் நிலை விரிவுரையாளர்கள் ஐவரினது தற்காலிக வேலை இணைப்பினை மேலும் நீடிக்க பொருத்தமான பணிப்புரை வழங்க வேண்டிய அதேநேரம், இக்கல்லூரியில் நிலவும் பௌதீக வளங்களின் பற்றாக்குறை, கல்விசாரா உத்தியோகத்தரின் பற்றாக்குறை, நிதிப் பதிவாளர் நியமனம் போன்ற குறைபாடுகளையும் உடன் நிவர்த்தி செய்து தரவும்.
கல்வி அமைச்சின் கீழ் இயங்கிவரும் மேற்படி கல்லூரியில் நாடு முழுவதிலுமிருந்தும் மூவினத்தினையும் அனைத்து மதப்பிரிவினையும் உள்ளடக்கிய மாணவர்கள் அனுமதி பெற்று ஆசிரியப் பயிற்சி பெற்று வருகின்றனர். இக்கல்லூரியின் அத்தியாவசியத் தேவைகள் பலவும் அபிவிருத்தி செய்யப்படுவதோ, கவனத்திற்கொள்ளப்படுவதோ இல்லையெனக் கல்லூரி நிர்வாகம் சுட்டிக் காட்டுகின்றது.
பெரும்பாலான வடக்கு, கிழக்கு மாணவர்களை உள்வாங்கி ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி ஆசிரியர்களாக பயிற்சி பெற்ற அநேக ஆசிரியர்கள் இங்கிருந்து வெளியேறி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணியாற்றி வரும் இவ்வேளை, இவர்கட்கு தரமான கல்வியை வழங்குவதற்கு அடிப்படை வசதிகள் காணப்படும் குறைபாடுகள் பெரும் தடையாக அமைகின்றன. இவர்களுக்கு வழங்கப்படும் தரமான ஆசிரியர் கல்வியினால் மட்டுமே பாடசாலைகளில் ஆரம்ப, இடைநிலைகளில் தர மான கல்வியைப் போதிக்க முடியும். மேலும், இவ்வாறு கல்வியியற் கல்லூரியின் மாணவர்களின் ஆசிரியர் கல்வியை மேலும் தரமேம்பாடு செய்யும்போதுதான் வடக்கு, கிழக்கு மாகாண ஆரம்ப, இடைநிலைக் கல்வியின் தரம் மேலும் உயரும்.
இதற்கேதுவாக, இங்கு கணினி ஆய்வு கூடம் ஒன்று அமைக்கப்படுவதோடு கல்லூரியின் நூல் நிலையத்தினையும் விரிவாக்க வேண்டும். அத்துடன், வளாகத்திற்கு உயரமான சுற்றுமதில் நிர்மாணிக்கப்பட்டு, வளாக நிலப்பரப்பும் துப்புரவு செய்யப்படல் அவசியமாகும். எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.