தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சிகளை முடித்து நியமனங்களை பெறவுள்ள ஆசிரியர்களுக்கு மாத்தறை மாவட்ட தோட்டப் பாடசாலைகளில் நியமிக்க வேண்டுமென இப்பகுதி புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் ஆறு தோட்டப் பாடசாலைகள் இருக்கின்றன. இவை அனைத்திலும் மலையக ஆசிரியர்கள் அண்மையில் நியமனம் பெற்றனர். இந்நிலையில் நீண்ட நாட்கள் அங்கு கடமையாற்றி வந்த அனுபவமிக்க ஆசிரியர்கள் இடம் மாற்றங்களைப் பெற்று செல்வதால் மீண்டும் ஆசிரிய பற்றாக்குறை இப்பாடசாலைகளில் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மாத்தறை மாவட்ட தோட்டப் பாடசாலைகளுக்கு கல்வியியல் கல்லூரியில் இருந்து வெளியேறும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது மிகவும் குறைவாகவே உள்ளன. விரல் விட்டு எண்ணக்கூடிய ஆசிரிய நியமனங்களே வழங்கப்பட்டுள்ளன.
எனவே, மாத்தறை மாவட்ட தமிழ் மாணவர்களின் நலன் கருதி கல்வியியல் கல்லூரியில் நியமனம் பெரும் ஆசிரியர்களை இப்பாடசாலைகளுக்கும் நியமிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.