சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொகவந்தலாவ நகரில் 5000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் தொழிலாளர்களின் பேரணியை பொகவந்தலாவை நகரில் மே முதலாம் திகதியன்று நடாத்த ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதாக, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொகவந்தலாவை பிரதேசத்தின் 8 மாதிரிக் கிராமங்கள் உள்ளடங்கலாக 44 டிவிஷன்களிலிருந்து தொழிலாளர்கள் பேரணிக்கென அணிதிரளவுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இப்பேரணியின் போது
பொய்க் கால்குதிரை, கரடி காவடி, கும்மி, கோலாட்டம், குரங்காட்டம், தெருக்கூத்து, சிலம்படி உட்பட பல பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மேதின ஊர்வலத்தில் இடம்பெறவிருப்பதாகவும் பேரணிக்கான ஏற்பாட்டாளர் அந்தனிஸ் தெரிவித்தார். இந்த மே தின விழாவிற்கு ஏனைய மாவட்டங்களான அட்டன், நோர்வூட், சாமிமலை, மஸ்கெலியா, நோட்டன் பிரிஜ், வட்டவலை, பத்தனை, தலவாக்கலை, பூண்டுலோயா, வட்டகொடை, அக்கரப்பத்தனை , டயகம, ராகலை, நுவரெலியா, உடபுஸல்லாவ, பதுளை, பசறை, களுத்துறை, மத்துகம, அவிசாவளை, கொழும்பு, நாவலப்பிட்டிய, கம்பளை, எட்டியாந்தோட்டை, அகலவத்தை போன்ற மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக் கணக்கான பாட்டாளி மக்கள் கலந்து கொள்ள மேதின ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் மேதின ஏற்பாட்டு குழுவினர்களோடு மே தின விழாவுக்கான பொறுப்பாளர், ஏ.சவரிநாதன் உரிய முன்னேற்பாடுகளை எடுத்து வருவதாகவும் எமது பத்திரிகைக்கு அறிவித்துள்ளார்.
மே தினநிகழ்வில் பிரபல இசைக் குழுவினர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதாக சவரிநாதன் மேலும் தெரிவித்தார்.