* கல்வி அமைச்சர் தெரிவிப்பு
பாடசாலைகளில் 2009 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படவிருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்ததுடன் இது தொடர்பில் புதிய சுற்று நிருபமொன்றும் வெளியிடவுள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பில் தேசிய கல்வி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகளைக் கருத்திற்கொண்டு புதிய சுற்று நிருபமொன்று தாயாரிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் வெளியிடப்படும்.
பிள்ளைகளை சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன் இது தொடர்பில் தேசிய கொள்கையொன்றை உருவாக்கி அதனை சட்டமாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இருந்த போதிலும் இந்த கொள்கைக்கு அமைய அடுத்த வருடத்தில் இதனை மேற்கொள்வது இயலாதவிடயம்.
இவ்வருடம் மாணவர்கள் தரம் ஒன்றுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட சமயம் எதிர்நோக்கப்பட்ட பிரச்சினைகளும் இதன் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட அனுபவங்களும் புதிய சுற்று நிருபத்தை தயாரிப்பதில் அடிப்படை விடயங்களாக கொள்ளப்பட்டுள்ளன.
இது இவ்வாறிருக்க புதிய கல்வி சட்டமொன்றை விரைவில் அரசாங்கம் அமுல்படுத்தவுள்ளது. இதனை தாயாரிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பிரேரணைகளும் கல்விமான்களின் ஆலோசனைகளும் மிக கவனத்துடன் ஆராயப்பட்டு, பின் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்படுமெனவும் தெரிவித்தார்.