எம்.ஏ.எம். நிலாம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை கண்காணிப்பதற்காக புதியதொரு உள்ளூர் கண்காணிப்புக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலொன்றுக்கான மக்கள் அமைப்பு (CAFFE) என்ற பெயரில் இந்த கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பிரதான தமிழ், முஸ்லிம், சிங்கள அமைப்புக்கள் ஊடகவியலாளர் தொழிற்சங்க சம்மேளனம், ஐக்கிய கடற்றொழில், கடற்றொழிலாளர் சங்கம், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு, இன்போம், இலங்கை தாய் சேய் அமைப்பு, மனிதாபிமான அமைப்பு, இந்து, முஸ்லிம், கத்தோலிக்க சமயத்தவர்களின் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் இந்தப் புதிய கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சில கண்காணிப்புக்குழுக்களின் செயற்பாடுகள் பாரபட்சமாக காணப்படுவதாலும் அவற்றின் இறுதியறிக்கைகள் உண்மைக்குப் புறம்பாகக் காணப்படுவதாலுமே புதிய அமைப்பு உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அதன் அமைப்பாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.
புதிய கண்காணிப்புக் குழுவின் முதலாவது ஊடகவியலாளர் மாநாடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற விருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கண்காணிப்புக்குழுவின் 20 பேரடங்கிய குழுவொன்று உடனடியாக கிழக்கின் மூன்று மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாகவும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டிருப்பதாகவும் திருகோணமலை மாவட்ட அலுவலகம் அடுத்தவார முற்பகுதியில் திறக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.