* லங்கா இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு
உலக சந்தையில் எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால் பெற்றோலியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென லங்கா இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை பரல் ஒன்றிற்கு 110 அமெரிக்க டொலரினால் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்தே இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே. ராமகிருஷ்ணன் தெரிவிக்கையில்;
`உலக சந்தையில் அதிகரித்துக் கொண்டிருக்கும் எண்ணெய் விலையினால் நாம் நாடளாவிய ரீதியில் மாதமொன்றிற்கு 750 மில்லியன் இலங்கை ரூபா வரை நட்டமடைய வேண்டியுள்ளது.
அத்துடன், எமது தலைமைக் காரியாலயமுள்ள இந்தியாவிலும் நாளொன்றிற்கு 320 கோடி இந்திய ரூபா வரை நட்டத்தைச் சந்தித்து வருகின்றோம்.
கடந்த 2007 ஆம் ஆண்டு உலக சந்தையில் எண்ணெயின் விலை அதிகரித்ததைப் போல இலங்கையிலும் விலை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தமையால் பாரிய நட்டத்திலிருந்து நிறுவனம் தப்பித்துக் கொண்டிருந்தது.
தற்பொழுது இலங்கையைப் பொறுத்தவரையில் டீசல் விலையில் லீற்றருக்கு 31 ரூபா வரை நட்டமடைய வேண்டியுள்ளது' என்றார்.