* அரசடிச்சேனை சந்தியில் சம்பவம்
எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் ஜே.வி.பி. வேட்பாளரொருவரும் அவரது ஆதரவாளர்களும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு இனம்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை- அக்கரைப்பற்று பிரதான வீதியில் அரசடிச்சேனை சந்தியில் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த போது இரவு 10.30 மணியளவில் அங்கு வந்த முகமூடியணிந்த பத்துப் பேரைக் கொண்ட கோஷ்டியினர் ஜே.வி.பி. வேட்பாளரான அபூ சஹீதையும் அவரது ஆதரவாளர்கள் மூவரையும் தாக்கியுள்ளனர்.
எதிர்வரும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அம்பாறையில் நடைபெறவிருக்கும் ஜே.வி.பி.பிரசாரக் கூட்டம் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த போதே இவர்கள் தாக்கப்பட்டுளளனர்.
இத்தாக்குதல் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஈ. ஐ 54/52 என்ற இலக்கத்தின் கீழ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.