இரத்தினபுரி மாவட்ட தோட்டப்பகுதி மக்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுப்பதைச் சில தோட்ட நிர்வாகங்கள் தட்டிக் கழித்து வருவதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலனி பிரேமரத்தின தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் சமூக சேவைகளை மேற்கொண்டு வரும் சி.டி.எப். அமைப்பு பெருந்தோட்ட மக்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதுகுறித்து இரத்தினபுரி மாவட்ட பிரதேச செயலாளர்கள் உதவிச் செயலாளர்கள், உட்பட பல முக்கியஸ்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்; தோட்டப் பகுதிகளில் பெருந் தொகையான இளைஞர் யுவதிகள் உட்பட கணிசமானோர் அடையாள அட்டை இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவர்கள் அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக தோட்ட நிர்வாகத்திடம் சென்றாலும் ஏதோவொரு காரணத்தைக் கூறி தட்டிக் கழித்து விடுகின்றனர். அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுத்தால் அவர்கள் வேறு இடத்திற்கு வேலைக்குச் சென்று விடுவார்கள் என்பதும் இங்கு கவனத்திற்குரியது.
சி.டி.எப். நிறுவனம் இம்மக்களின் நலன்கருதி ஏற்பாடு செய்துவரும் இவ்வேலைத்திட்டம் முழுமையாக நிறைவுபெறும் என்பதில் எமக்கு நம்பிக்கையுண்டு. இப்பகுதியில் அரச சார்பற்ற 60 நிறுவனங்கள் சமூக சேவைகளை செய்து வருகின்ற போதும் அவை உரிய முறையில் பணிகளை முன்னெடுப்பதில்லை.
சி.டி.எப். நிறுவனத்தின் பணிப்பாளர் சார்ள்ஸ் மோகன் ரவி இப்பணியை முறையாக முன்னெடுத்துச் செல்கின்றார். பிரதேச மட்டத்தில் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான எமது நடவடிக்கை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.