நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலையடுத்து சப்ரகமுவ மாகாண சபையைக் கலைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அப்பிரதேச அரசியல் வட்டாரங்களில் பரவலான கருத்து நிலவுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் மக்கள் செல்வாக்கினை உரசிப்பார்ப்பதற்காக இம் மாகாண சபையைக் கலைத்து தேர்தலை நடத்துவது குறித்து அதிகாரத் தரப்புக்கு யோசனை முன்வைக்கப் பட்டுள்ளதாகவும் இம் மாகண சபையின் ஆளுந்தரப்பு இத் தேர்தலை வெற்றி கொள்ள முடியுமென உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளமையினால் கிழக்கு மாகண சபையை அரச தரப்பு வெற்றிகொள்ளும் பட்சத்தில் சப்ரகமுவ மாகாண சபை கலைக்கப்படலாமென இம் மாகாண சபையின் ஆளும் எதிர்த்தரப்பு வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
மொத்தம் 44 உறுப்பினர்களைக் கொண்ட இம் மாகாண சபையில் ஜே.வி.பி. யுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 27 உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 16 உறுப்பினர்களையும் இ.தொ.கா. -1 உறுப்பினரையும் கொண்டுள்ளன. எனினும் இம் மாகாண சபையில் ஜே.வி.பி.யின் ஆதரவின்றி சுயமாக இயங்க முடியாத நிலைக்கு ஆளுந்தரப்பு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலொன்றுக்கு முகங்கொடுக்கும் பட்சத்தில் ஜே.வி.பி. யின் ஆதரவின்றி அறுதிப் பெரும் பான்மையுடன் தமக்கு வெற்றி பெற முடியுமென ஆளுந்தரப்பு உறுதியாக நம்புவதாகத் தெரிகிறது.
இதே வேளை, பொருளாதார நெருக்கடியை முன் வைத்து மக்களின் செல்வாக்குடன் அதிகாரத்தைக் கைப்பற்றலாமென்ற எதிர்பார்ப்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் மாகண சபைக் கலைப்பு முயற்சிக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருகின்றமையையும் காண முடிகிறது.