* `மூதூர் படுகொலை போர்க்குற்றம்'; கடும் விசனம்
பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமர்வுகளின் பணியை அவதானித்து வந்த சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு வெளியேறுவதாக அறிவித்ததையடுத்து பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் தன்னார்வ தொண்டர் நிறுவனமான பட்டினிக்கு எதிரான செயற்பாட்டமைப்பும் (ஏ.சி.எவ். அல்லது ACTION AGAINST HUNGER) இலங்கையில் தனது நடவடிக்கைகளை வாபஸ் பெறுவதெனத் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளின் போது சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழுவின் பிரசன்னமானது விசாரணை நடவடிக்கைகளின் நம்பகத்தன்மைக்கு மிகவும் அத்தியாவசியமானதென பட்டினிக்கு எதிரான செயற்பாட்டமைப்பு எப்போதுமே கருதி வந்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போது நடைமுறைகளை மேம்படுத்துவதற்குரிய சிபார்சுகளை பலதடவைகள் சர்வதேச சுயாதீன முன்னணி நிபுணர்கள் குழு தெரிவித்திருந்த போதும் அவை ஒரு போதும் பரிசீலனைக்குட்படுத்தப்படவில்லை. சர்வதேச நிபுணர்கள் எழுப்பியிருக்கும் ஆட்சேபனைகளால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்கழுவானது சர்வதேச தரத்திற்கு மதிப்பளிக்குமா என்பது தொடர்பாக பட்டினிக்கு எதிரான செயற்பாட்டமைப்பு சந்தேகம் எழுப்பியுள்ளது.
மூதூர் சம்பவம் தொடர்பாக வேறுபட்ட வட்டாரங்களிலிருந்து சகல தகவல்களையும் பட்டினிக்கு எதிரான செயற்பாட்டமைப்பு அறிந்தது. ஆனால், அந்த அமைப்பு ஒரு போதும் தனது அபிப்பிராயத்தை தெரிவித்திருக்கவில்லை. குற்றச்சாட்டுக்கான பொறுப்புப் பற்றிய தீர்ப்புப் பற்றியோ அல்லது குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்கள் பற்றியோ இந்த அமைப்பு கருத்தெதனையும் வெளியிட்டிருக்கவில்லை. சந்தேக நபர்களை விசாரிப்பது விசாரணை நீதிமன்றத்தின் கடமையென அந்த அமைப்பு கருதுகிறது. ஆதலால், சட்ட நடவடிக்கைகளுக்குப் புறம்பாக வெளியிடப்படும் தகவல்கள் குறித்து எந்தவொரு நிலைப்பாட்டை எடுக்கும் நிலையில் பட்டினிக்கு எதிரான செயற்பாட்டு அமைப்பு இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் விசாரணையாளர்களோ அல்லது மனித உரிமை அமைப்போ அல்லவென்றும் உண்மையானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகளுக்குக் கோரும் பாதிக்கப்பட்ட தரப்பினர் என்றும் அந்த அமைப்புத் தெரிவித்திருக்கிறது.
1979 இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு 43 நாடுகளில் பட்டினிக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. எந்தவொரு குற்றச்செயலிலும் சம்பந்தப்படாத தமக்கு 2006 ஆகஸ்ட் 4 இல் மூதூரில் குற்றச் செயல் இடம்பெற்றிருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன், அங்கு இடம்பெற்ற மனிதாபிமானப் பணியாளர்கள் படுகொலையானது மனிதாபிமான அமைப்புகளின் வரலாற்றில் ஒரு போதுமே இடம்பெறாததொன்று என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மூதூர் மோதலின் போது ஏற்பட்ட பொதுவான சம்பவமாக அந்தப் படுகொலைகளைக் கருத முடியாதெனவும் தமது குழுவினர் விஷேடமாக வேண்டுமென்று இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களுடைய மரணமானது ஏற்பாடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தன்மையில் காணப்படுவதாகவும் சகலவுமே பிரக்ஞையுடன் குரூரத்தனமான முறையில் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டோர்கள் ஆயுதபாணிகள் அல்ல என்றும் எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் அவர்கள் இருந்ததாகவும் பட்டினிக்கு எதிரான செயற்பாட்டமைப்புக் கூறியுள்ளது.
இந்தப் படுகொலையின் பொறுப்பாளிகள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் அத்துடன், இப்படுகொலையானது ஜெனீவா சாசனத்தை மீறிய போர்க் குற்றம் என்று தம்மால் உறுதியாகக் கூற முடியுமெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்கள், யுத்தம், உள்நாட்டு மோதல்கள் போன்ற நெருக்கடி நிலைமையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே அரச சார்பற்ற நிறுவனங்களின் நோக்கமாகும். மனிதாபிமான நெருக்கடிகளையும் இடப்பெயர்வுகளையும் தவிர்ப்பதற்கு உதவுவது இந்த நிறுவனங்களின் பணியாகும், டார்பூர், செச்னியா போன்ற இடங்களில் பட்டினிக்கு எதிரான செயற்பாட்டமைப்பு இத்தகைய பணிகளில ஈடுபட்டிருக்கின்றது. ஆனால், மூதூரில் இடம்பெற்ற போன்றதொரு சம்பவம் வேறு எங்கும் இடம்பெறவில்லையென அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.