வெலிக்கடைச் சிறைச்சாலையினுள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவமொன்றில், மரண தண்டனைக் கைதியான பொட்ட நௌபர் படுகாயமடைந்துள்ளார்.
பொட்ட நௌபரை கொலை செய்யும் நோக்கிலேயே நால்வர் அவர் மீது கத்திக்குத்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியை படுகொலை செய்த வழக்கில், பாதாள உலகக் குழுத் தலைவரான பொட்ட நௌபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது வெலிக்கடைச் சிறையினுள் மரண தண்டனைக் கைதியாக இருக்கும் நிலையிலேயே நௌபர் மீது நேற்று மாலை நான்கு மணியளவில் சக கைதிகள் நால்வர் கடுமையான கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் பொட்ட நௌபருக்கும் இராணுவத்திலிருந்து தப்பியோடி குற்றச் செயல்களில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட ஒருவருக்குமிடையிலான பகைமை காரணமாகவே இந்தக் கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தையடுத்து விரைந்து சென்ற சிறைக் காவலர்கள், கத்திக் குத்தை நடத்தியவர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்து அவர்களை மடக்கிப் பிடித்து நௌபரைக் காப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த பொட்ட நௌபர் உடனடியாக சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகளை சிறைச்சாலை அதிகாரிகளும் வெலிக்கடை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.