* எனினும் நுகர்வோர் அதிகார சபையால் சில கடைகள் `சீல்' வைப்பு
எம்.ஏ.எம்.நிலாம்
அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள உத்தரவாத விலைக்கே அரிசியைச் சந்தைப்படுத்த மொத்த வியாபாரிகள் தீர்மானித்த அதேநேரம் நேற்று மாலை புறக்கோட்டையில் பல வர்த்தக நிலையங்களுக்குள் நுழைந்த நுகர்வோர் விவகார அதிகார சபையினர் அங்கு சோதனைகளை நடத்தியதுடன் சில வர்த்தக நிலையங்களை சீல் வைத்து மூடியுமுள்ளனர்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கம் நேற்று வெள்ளிக்கிழமை அவசரமாகக் கூடி நிலைமைகளை விரிவாக ஆராய்ந்ததன் பின்னரே உத்தரவாத விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் முடிவை எடுத்ததாக சங்கத்தின் தலைவர் எஸ்.பி.சாமி தெரிவித்தார்.
தற்போது கையிருப்பிலுள்ள அரிசியை உத்தரவாத விலைக்கு விற்கும் போது ஒரு கிலோவுக்கு 10 ரூபா முதல் 15 ரூபா வரையில் நஷ்டமேற்படுவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் சங்கம், இதனை ஈடு செய்வது கஷ்டமாக இருக்கின்ற போதிலும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு அந்த நஷ்டத்தை தாங்களே பொறுப்பேற்க மொத்த வியாபாரிகள் முன் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் தலை நகரிலும், வெளிமாவட்டங்களிலும் மொத்த வியாபாரிகளும், நெல் ஆலை உரிமையாளர்களும் அரசின் திடீர் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து தமது கடைகளையும், நெல் ஆலைகளையும் மூடியிருந்தனர். இதன் காரணமாக நேற்று நண்பகல் வரை அரிசி சந்தைக்கு வரவில்லை. சில்லறை வர்த்தக நிலையங்களில் கூட அரிசி இல்லை என்ற அறிவித்தல்கள் காட்சிக்குவைக்கப்பட்டிருந்தன.
இதனிடையே வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன அரிசியை சந்தைக்கு விடாமல் பதுக்குவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுத்திருந்தார்.
முதலில் நேற்று நண்பகல் 12 மணிக்குள் மொத்த விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டு அரிசியை விற்கத்தவறினால், பாவனையாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள், பாவனையாளர் அதிகாரசபையின் மூலம் மூடப்பட்ட கடைகளை சுற்றி வளைத்து சேமிக்கப்பட்டுள்ள அரிசியை கொண்டு வந்து சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் உடனடியாக ஜனாதிபதியின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் தலையீட்டினால் அந்த நடவடிக்கை முதலில் கைவிடப்பட்டது.
இதேவேளை, நேற்றுக் காலை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் சங்கம் அவசரமாகக் கூடி நிலைமைகளை விரிவாக ஆராய்ந்துள்ளது. சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் கூடுதலான நேரம் கலந்துரையாடியதன் பின்னர் அரசாங்கத்தின் நடவடிக்கை வர்த்தகர்களை பாதித்தாலும் தற்போதைய சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கே அரிசியை விற்பதெனத் தீர்மானித்துள்ளது.
இந்த முடிவையடுத்து மூடப்பட்டிருந்த மொத்த வியாபாரத் தளங்களும் ஏனைய சில்லறை வியாபார நிலையங்களும் நேற்று நண்பகலே திறக்கப்பட்டு வழமையான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட அரிசியில் குறிப்பிடத்தக்க அளவு தொகை இருப்பதாகவும் அந்த அரிசியையும் உத்தரவாதவிலைக்கே விற்பதென சங்கம் இணக்கம் கண்டுள்ளது. தங்களிடமிருக்கும் இந்த அரிசித் தொகைக்கு கிலோவுக்கு 10 ரூபா முதல் 15 ரூபா வரை நஷ்டமேற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் அரசுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டியுள்ளதாலும், மக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டியிருப்பதாலும் இந்த நட்டத்தை தாங்களே பொறுப்பேற்க மொத்த விற்பனையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எம்.கே.ரட்னாயக்காவிடம் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விளக்கம் கேட்ட போது அவர் கூறியதாவது;
`கொழும்புக்கும், கம்பஹா மாவட்டத்திற்கும் கூடுதலாக மொத்தமாக அரிசியை சந்தைப்படுத்தும் மரந்த கஹமுல நெல் ஆலை உரிமையாளரும், பொலநறுவை நெல் ஆலைகளின் உரிமையாளர்களும் அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு நெல்லை விநியோகிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து விடயங்களும் சுமுகமான சூழ்நிலைக்கு வந்து விடும். எனினும் கொழும்பிலும், வெளிமாவட்டங்களிலும் மொத்த விற்பனையாளர்களிடம் கையிருப்பில் இருக்கும் அரிசி கூடுதல் விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டவை என்பதை நாம் உணர்கின்றோம். அவர்களுக்கு பெரிய அளவில் நட்டத்தை ஏற்படுத்துவது நியாயமானதென நாம் கருதவில்லை.
எனவே இவர்களுக்கு எந்த விதத்தில் நிவாரணமோ, மானிய உதவியோ வழங்க முடியும் என்பது குறித்து அரசு கவனம் செலுத்தி வருகின்றது" எனத் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கிடையில் மியன்மாரிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் அரிசி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, அடுத்த வார முற்பகுதியில் உள்நாட்டு அரிசி போதுமான அளவு சந்தைக்கு வரவிருக்கின்றது. எனவே அடுத்த வாரத்தில் அரிசித்தட்டுப்பாடு பெரும்பாலும் நீங்கி விடுவதோடு அரசின் உத்தரவாத விலைக்கு அரிசி கிடைக்குமென ரட்னாயக்கா தெரிவித்தார்.
கடைகளுக்கு `சீல்' வைப்பு
இந்த நிலையில் நேற்று மாலை புறக்கோட் டையில் அரிசி விற்பனை நிலையங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரி கள் திடீர் சோதனை நடத்தியுள்ளர்.
அரிசியை அரசின் உத்தரவாத விலையில் விற்பனை செய்ய அவர்கள் தீர்மானித்து அதற்கேற்ப விற்பனையில் ஈடுபட்டிருந்த போதும் அரசின் உத்தரவுக்கு கட்டுப்படத் தவறியதாகக் கூறி அதிகார சபையால் சில வர்த்தக நிலையங்கள் `சீல்' வைத்து மூடப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது