குழாய் நீர்க் கட்டணப் பட்டியலுடன் 15 வீத பெறுமதி சேர் வரியை (வற்) அறவிடும் திட்டம் உடனடியாகக் கைவிடப்படுவதாக நீர்வள மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த 1 ஆம் திகதி முதல் குழாய் நீர்க் கட்டணப் பட்டியலுடன் 15 வீத பெறுமதி சேர் வரி அறவிடப்படும் நடைமுறை அமுலுக்கு வருவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இதற்கெதிராக பல முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து நீர்வள மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை காலை முக்கிய கூட்டமொன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சின் உயரதிகாரிகளும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டு இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர்.
இதனையடுத்தே, இது தொடர்பாக மீள்பரிசீலனை செய்யப்படும் வரை கட்டணப் பட்டியலுடன் பெறுமதி சேர் வரி (15 வீதம்) அறவிடப்படுவதென்ற தீர்மானம் இடை நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் செயலாளர் அசோக்க பீரிஸ் தெரிவித்துள்ளார்.